புதுடில்லி: ”பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, ஆட்சேர்ப்பு மற்றும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்கள் உள்ளிட்ட அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் நாம் ஒன்றிணைந்து அழிக்க வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என்பதை அனைத்து நாடுகளும் ஒரே குரலில் தெரிவிக்க வேண்டும்,” என, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமரை வைத்துக்கொண்டு பிரதமர் மோடி பேசினார்.
எஸ்.சி.ஓ., எனப்படும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2001ம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகரில் துவங்கப்பட்டது. கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய ஆறு நாடுகள் இணைந்து இதை உருவாக்கின. பயங்கரவாதம், பிரிவினைவாதத்தை எதிர்கொண்டு, பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது இதன் முக்கிய நோக்கமாகும்.
தற்போது 10 நாடுகள் முழு உறுப்பினர்களாக உள்ளன. 2017 முதல் இந்தியாவும் இணைந்தது. இந்நிலையில், 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு, மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று நடந்தது. அமைப்பு துவங்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி இந்த மாநாடு நடக்கிறது.
‘நிலையான அமைதி, வளர்ச்சி மற்றும் வளத்திற்காக ஒன்றிணைந்து பயணிப்போம்’ என்பது இந்த ஆண்டு மாநாட்டின் மையக்கருத்தாக உள்ளது. மாநாட்டு அரங்கிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை பிற நாட்டு தலைவர்கள் வரவேற்றனர். சீன அதிபர் ஷீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோருடன் பிரதமர் மோடி உற்சாகமாக கைகுலுக்கி பேசினர்.
பயங்கரவாதம், உலக மோதல்கள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி, மாநாட்டில் பேசினார். அவர் மேலும் பேசியதாவது:
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, ஆட்சேர்ப்பு மற்றும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்கள் உள்ளிட்ட அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் நாம் அழிக்க வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என்பதை அனைத்து நாடுகளும் ஒரே குரலில் தெரிவிக்க வேண்டும்.
உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும். எந்த பிரச்னைக்கும் போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது. அனைத்து போர்களும், மோதல்களும் பேச்சு மற்றும் துாதரக நடவடிக்கைகள் வாயிலாக தீர்க்கப்பட வேண்டும்.
சந்தைகளை ஒன்றிணைத்து, வர்த்தகத்தை எளிதாக்கி, வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் அனைத்து இணைப்பு திட்டங்களுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கிறது. அதே சமயம், இத்தகைய இணைப்பு திட்டங்கள் அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதாக இருக்க வேண்டும்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நாகரிகங்கள், கலாசாரங்கள் மற்றும் சிந்தனைகள் சந்திக்கும் இடமாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் உறுப்பு நாடுகளின் மக்களிடையிலான நேரடி தொடர்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இளைஞர்களிடையே தொடர்பை வலுப்படுத்துவதற்காக, ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் புத்தொழில்களுக்கான மன்றம், இளம் எழுத்தாளர்கள் மாநாடு, இளம் விஞ்ஞானிகள் மன்றம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்த இந்த மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் பங்கேற்றார்.
