திருச்சூர்: ”நெடுஞ்சாலையில் லாரியை சட்டவிரோதமாக நிறுத்தியது குற்றம். நெடுஞ்சாலையில் வாகனங்களை சட்டவிரோதமாக நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கேரள எம்.பி.,யான மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவின் திருச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில், அதில் பயணித்த மாணவர்கள் எட்டு பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறியதாவது: இது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பேசி, அவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளேன்; இந்த விவகாரத்தில் தப்பிக்கும் முயற்சி காணப்படுகிறது. நெடுஞ்சாலை உண்மையில் மக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுவிட்டதா?
ஒரு சாலை பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பதற்கு முறையான நடைமுறை ஒன்று உள்ளது. வாகனப் பாதையை மாற்றிச் செல்வதற்கான அறிவிப்புப் பலகைகள் சரியாக வைக்கப்படவில்லை. லாரி டிரைவர் செய்தது ஒரு தீவிரமான குற்றம். இப்போது பல்வேறு தரப்பினரிடையே பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொள்வது அல்ல, மாறாகச் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதே சரியானது.
மாநில உள்துறை அமைச்சருடனும் நான் தொலைபேசியில் பேசினேன்; இனி நெடுஞ்சாலையில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும். விதிமீறல்களுக்கு 25,000 முதல் 50,000 ரூபாய் வரை அபராதம் விதிப்பது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். நெடுஞ்சாலையில் வாகனங்கள் சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டால், இனி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
