இந்த கூட்டத்தில் 85 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற நிலையில், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, மாவட்டச் செயலாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்த கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம், சட்டமன்றத்தில் காவல்துறை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு நாளை முதல்வர் விஜய் பதிலளிப்பது விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “முதல்வர் 3 நாள் ரிகர்சல் செய்துவிட்டு வருவார். சூட்டிங் வருகிற மாதிரி நாளைக்கு வந்து மனப்பாடம் செய்ததை பஞ்ச் டயலாக் பேசுவார். நீங்கள் அதை தான் போடுவீர்கள். வெங்காயம், பருப்பு, அரிசி, எண்ணெய் என அத்தனை விலையும் ஏறிப் போச்சு. அதைப் பற்றி பேசபோவது இல்லை. ஆனால், நாளைக்கு விஜய் அதைப் பேசினார், இதை பேசினார் தான் போட போறீங்க… அதனால் தான் 3 நாள் ரிகர்சல் எடுத்து வந்து பேசுவார். ஒரு முதலமைச்சர் உடனுக்குடன் பதில் சொல்ல வேண்டும். அது தான் காலகாலமாக வரலாறு. இவர் ஸ்டார்ட் என்று சொன்னால் தான் பதில் சொல்வார் போல…” என்று விமர்சனம் செய்தார்.
