குறிப்பாக மீன்வளத்துறை சார்பில் எம்.எல்.ஏ கேட்கும் கேள்விகளுக்கு துறை அமைச்சரான ஸ்ரீநாத் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவையை விட்டு வெளியேற, மாற்று பேரவைத் தலைவராக தவெக எம்.எல்.ஏ சத்தியபாமா பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தினார். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவையில் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் ரவிசங்கர் வழக்கமாக அவையை வழிநடத்துவார். ஆனால், இருவரும் அவையில் இல்லாததால் திருப்பூர் வடக்குத் தொகுதி தவெக எம்.எல்.ஏவான சத்தியபாமாக மாற்று பேரவைத் தலைவராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார்.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெண், மாற்று பேரவைத் தலைவராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்துவது இதுவே முதல் முறையாகும். தவெக எம்.எல்.ஏ சத்தியபாமா மாற்று பேரவைத் தலைவராக அவையை வழிநடத்திக் கொண்டிருக்கும் போது திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, சத்தியபாமாவை பாராட்டினார்.
இந்த நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சத்தியபாமாவிடம், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இந்த பெருமை வாய்ந்த 17வது சட்டமன்றத்தில் அந்த இருக்கை என்பது ஒரு வரலாறு. அந்த இருக்கையில் ஒரு பெண்ணாக அமர்ந்த அந்த தருணம் வாழ்நாளில் மறக்க முடியாது. இந்த நிகழ்வை என்றைக்கும் மறக்க முடியாது. அதற்கு காரணம் முதல்வர் மட்டும் தான். பெண்களுக்கு வாய்ப்பு, முன்னுரிமை கொடுத்து வருகிறார். இதை ஒட்டுமொத்த சமுதாய பெண்களுக்கும் நான் காணிக்கையாக செலுத்துகிறேன். இருக்கையில் அமர்ந்த போது நிறைய பதற்றம் இருந்தாலும்கூட அதை வெளியில் காமிக்கவில்லை. அதை பொறுப்பாக தான் பார்த்தேன். கிடைக்கக்கூடிய நேரத்தில் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான் மனதில் இருந்தது” என்று கூறினார்.
