நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸ் தொடர்பான பயணம் ஆவணப்படமாக ‘கிளாடியேட்டர்ஸ்’ எனும் தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் அஜித்தின் ரேஸ் பயணம் மற்றும் அதில் அவர் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசப்படுகிறது. இப்படத்தை அஜித்தை வைத்து கிரீடம் படம் இயக்கிய ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். அப்படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷே இதற்கும் இசையமைக்கிறார். இப்படத்தை கோல்டன் டிரோபி ஃபிலிம் புரொடக்ஷன் பேனர் சார்பில் அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார்.
ஏற்கனவே ஒரு முன்னோட்டம் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனிடையே இப்படத்தின் டிரெய்லர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் குறிப்பிட சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இதில் ரசிகர்களுடன் இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், ஆதிக் ரவிச்சந்திரன், சிறுத்தை சிவா மற்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கலந்து கொண்டனர். டிரெய்லர் மொத்தம் 3 நிமிடங்களுக்கு அமைந்துள்ளது. இதில் ஷாலினி மற்றும் அவரது இரு குழந்தைகள் அஜித் குறித்து விவரிக்கின்றனர். படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெய்லரின் திரையிடலின் போது ரசிகர்களுடன் உரையாடிய சுரேஷ் சந்திரா, ஆடியோ லான்சுக்கு ரெடியாகிடலாமா என்று கேட்க, ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் ஆடியோ லான்ச், நேர்காணல், விருது விழா, செய்தியாளர் சந்திப்பு என புரொமோஷன் நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்கும் நிகழ்ச்சிகளை தவிர்த்து வரும் அஜித் அதை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வருகிறார். ஆனால் சமீபகாலமாக அந்த கொள்கைகளில் சிறிது மாற்றத்தை செய்து வருகிறார். குறிப்பாக ரேஸிற்கு பிறகு விருது விழா, செய்தியாளர் சந்திப்பு ஆகியவைகளை தொடர்ச்சியாக கடைபிடிக்கிறார். ஆனால் இவை அனைத்து ரேஸ் சம்பந்தமான நிக்ழவுகளே ஆகும். திரைப்படங்கள் கிடையாது.
இந்த சூழலில் அவரது ரேஸ் சம்பந்தமாக உருவாகியுள்ள இந்த கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்திற்கு ஆடியோ லான்ச் நடக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. மேலும் அவரே தயாரித்து நடித்துள்ளதால் அதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் திரை வட்டாரத்தில் தகவல் வெளியாகிறது. அஜித் முதன் முறையாக ஒரு ஆவணப்படத்தில் கவனம் செலுத்தியிருப்பதும் முதன் முதலில் ஒரு டிரெய்லரை திரையிரங்கில் திரையிடப்பட யோசனை செய்தது அவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கக்து.
