நமது சிறப்பு நிருபர்
பார்லிமென்ட்டில், பெண் எம்.பி.,க்களை அவதுாறாக பேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, மழைக் கால கூட்டத் தொடர் முழுவதும் திரிணமுல் காங்., – எம்.பி., கல்யாண் பானர்ஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கி, வரும் ஆக., 13 வரை நடக்கிறது. ‘நீட்’ வினாத்தாள் கசிவு பிரச்னை, டில்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர் நடத்திய போராட்டம் ஆகியவை காரணமாக முதல் இரண்டு நாட்கள் பார்லி.,யின் இரு அவைகளும் முடங்கின.
இந்நிலையில், மூன்றாவது நாளான இன்றும், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் லோக்பசா பிற்பகல் 2:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, திரிணமுல் காங்., கட்சியில் இருந்து இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சிக்கு சமீபத்தில் தாவிய பெண் எம்.பி.,க்கள் கக்கோலி கோஷ் தஸ்திதார், மிதாலி பாக் உள்ளிட்டோரை சந்தித்த திரிணமுல் காங்., – எம்.பி., கல்யாண் பானர்ஜி தரக்குறைவாகவும், அவதுாறாகவும் பேசியதாக கூறப்படுகிறது.
அவரது பேச்சு லோக்சபாவின் கண்ணியத்தை பாதித்துள்ளதாக, சம்மந்தப்பட்ட பெண் எம்.பி.,க்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தனர். பிற்பகலில் லோக்சபா கூடியபோது, சபைக்கு தலைமை தாங்கிய கிருஷ்ண பிரசாத் தென்னேட்டி, பெண் எம்.பி.,க்கள் அளித்த புகார் மீது தீர்மானம் நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார்.
இதை ஏற்று, கல்யாண் பானர்ஜியை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் கொண்டு வந்தார். அப்போது எதிர்க்கட்சியினர் ‘நீட்’ வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி இருந்தனர். எனினும், இந்த அமளிக்கு இடையே, கல்யாண் பானர்ஜியை கூட்டத் தொடர் முழுதும் இடைநீக்கம் செய்யும் தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து லோக்சபாவில் இருந்து அவர் வெளியேற உத்தரவிடப்பட்டது.
