பில்லா 2 படத்தில் இருந்து விலக இந்த நடிகர் தான் காரணம்: 14 ஆண்டுக்கு பின் ரகசியம் உடைத்த விஷ்ணுவர்த்தன்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பணியாற்றியுள்ள இயக்குநர் விஷ்ணுவர்தன், சமீபத்தில் தனது திரையுலக வாழ்க்கையில் எதிர்கொண்ட ஒரு சவாலான காலகட்டத்தை நினைவுகூர்ந்துள்ளார். படப்பிடிப்பு தேதிகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டதால், இரண்டு முக்கியமான படங்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை தனக்கு ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். 

அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் பில்லா. விஷ்ணுவர்த்தன் இயக்கிய இந்த படம், 1980-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்த் நடித்த பில்லா படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்து 5 ஆண்டுகள் கழித்து பில்லா 2 என்ற படம் வெளியானது. அஜித் நாயகனாக நடித்த இந்த படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கவில்லை. சக்ரி டோலட்டி என்பவர் இயக்கியிருந்தார். பில்லா 2 படத்தில் இருந்து தான் விலகியது ஏன் என்பது குறித்து விஷ்ணுவர்த்தன் கூறியுள்ளார்.

பில்லா படத்தை தொடர்ந்து ‘பில்லா 2’ படத்தில் மீண்டும் அஜித்துடன் இணைய இருந்த விஷ்ணுவர்த்தன், அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு, போஸ்டர்களும் வெளியிடப்பட்டிருந்த நிலையில், பவன் கல்யாணுடன் மற்றொரு படத்தில் பணியாற்ற அவர் ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்தார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு நாட்களும் ஒன்றாக இருந்ததால், தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு ஏற்கெனவே அளித்திருந்த தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அஜித்தின் பில்லா 2 படத்தை விஷ்ணுவர்த்தன் கைவிட முடிவு செய்துள்ளார்.

இது குறித்து இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த விஷ்ணு வர்த்தன், ‘பில்லா 2’ படத்திலிருந்து விலகியதற்குப் பின்னால் இருந்த கடினமான சூழ்நிலைகளை நினைவுகூர்ந்தார். அஜித்துடன் வெற்றிகரமாக இணைந்து பணியாற்றியதைத் தொடர்ந்து ‘பில்லா 2’ படம் அறிவிக்கப்பட்டிருந்ததால், அந்தப் படத்திலிருந்து விலகுவது மிகவும் சவாலான முடிவாக இருந்தது. நான் எதிர்கொண்ட மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இதுவும் ஒன்று. அஜித்துடன் பணியாற்றுவதில் இருந்த நெருக்கமும், இருவரும் மீண்டும் இணையவிருந்த எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. 

அதே சமயம், நான் ஏற்கெனவே அளித்திருந்த வாக்குறுதியின்படி ‘பஞ்சா’ படத்தைத் தொடர வேண்டும் என்பதால், பில்லா 2 படத்தில் இருந்து விலக வேண்டும் என்பதே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தது. ‘பஞ்சா’ படத்தின் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதால், படக்குழுவினர் அனைவரும் அந்தப் படத்திற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அந்தக் கட்டத்தில் நான் விலகினால், அது படத்தையும், ஏற்கெனவே தங்களது நேரத்தையும் செலவிட்டு பணியாற்றத் தொடங்கியவர்களையும் பாதிக்கக்கூடும்.

நெறிமுறை ரீதியாகவும், தொழில்முறை ரீதியாகவும், நான் முதலில் பவன் சாரிடம் வாக்குறுதி அளித்திருந்தேன். நான் எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலையை அஜித் புரிந்துகொண்டு, எனது முடிவை ஏற்றுக்கொண்டார். இரு நடிகர்களுடனுமே எனக்கு வலுவான தொழில்முறை உறவு இருந்ததால், இந்தச் சூழ்நிலை மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும், பவன் கல்யாணுக்கு அளித்திருந்த எனது வாக்குறுதியைக் காப்பதே தொழில்முறை ரீதியாக சரியான முடிவு என்று விஷ்ணுவர்த்தன் கூறியுள்ளார்.

Source link