உயர்வுடன் நிறைவுற்ற வாரம் ரூ.15 லட்சம் கோடி லாபம் பழையபடி போர் ஆரம்பிச்சுடாம இருந்தா சரி

சர்வதேச சந்தையில் நிலவும் சாதகமான சூழல் மற்றும் அன்னிய முதலீட்டாளர்களின் வருகையால், நேற்று இந்திய பங்கு சந்தை சற்று உற்சாகமாக வர்த்தகமானது. சென்செக்ஸ் 504 புள்ளிகள் உயர்ந்து, 78,493 என்ற அளவிலும்; நிப்டி 156 புள்ளிகள் அதிகரித்து, 24,353 என்ற அளவிலும் நிறைவடைந்தன. நிப்டி 24,250க்கு மேல் இருப்பது, 24,900 வரை உயர்வதற்கான அறிகுறியாகும்; எனினும், 24,400 புள்ளிகளில் வலுவான தடை இருப்பதால், முதலீட்டாளர்கள் கவனத்துடன் செயல்படுவது அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சந்தை மதிப்பு மீண்டும் 465 லட்சம் கோடி ரூபாய்
பி.எஸ்.இ.,யின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு, ஈரான் போர் பதற்றத்திற்கு முந்தைய நிலையான 5 டிரில்லியன் டாலர், அதாவது 465 லட்சம் கோடி ரூபாய் அளவை மீண்டும் எட்டியுள்ளது. இருப்பினும், சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் போருக்கு முந்தைய நிலையை விட முறையே 3,900 மற்றும் 1,100 புள்ளிகள் குறைவாகவே உள்ளன. பெரிய நிறுவன பங்குகளை விட, ‘மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப்’ குறியீடுகள் விரைவாக மீண்டு, போருக்கு முந்தைய தங்களது பழைய நிலையை தொட்டுள்ளன.

3% ஏற்றத்துடன் ஆர்.வி.என்.எல்.,
தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவில், 968 கோடி ரூபாய் மதிப்பிலான தானியங்கி சிக்னல் ஒப்பந்தத்தை ஆர்.வி.என்.எல்., நிறுவனம் பெற்றுள்ளது. இதனால், இப்பங்கு விலை நேற்றைய வர்த்தகத்தின் போது 6 சதவீதம் வரை உயர்ந்து, இறுதியில் 3 சதவீத ஏற்றத்துடன் 302.78 ரூபாயில் நிறைவடைந்தது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 14 சதவீதம் லாபம் தந்துள்ளது. ரயில்வே நவீனமயமாக்கல் திட்டங்களால் ஆர்.வி.என்.எல்., வசம் போதிய ஆர்டர்கள் இருப்பது, வருவாய் வளர்ச்சிக்கு வலு சேர்க்கும். இருப்பினும், பங்கு விலை உச்சத்தில் இருப்பதால், புதிய முதலீட்டாளர்கள் கவனத்துடன் செயல்படுவது அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்றத்துக்கான காரணங்கள்

1. இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையிலான பேச்சு

2. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலருக்கும் கீழ் நீடிப்பது

3. நீண்ட இடைவெளிக்கு பின், அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குகளை வாங்க துவங்கியுள்ளது

4. அமெரிக்காவின் ‘எஸ் அண்டு பி 500’ மற்றும் ‘நாஸ்டாக்’ குறியீடுகள் புதிய உச்சம் தொட்டது

5. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது.

விப்ரோ லாபம் சரிவு; பங்கு விலை வீழ்ச்சி
விப்ரோ நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 1.90 சதவீதம் சரிந்து, 3,501.80 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மந்தமான முடிவுகளால், பங்கு விலை 2.83 சதவீதம் சரிந்து, 204.30 ரூபாய்க்கு முடிந்தது. சர்வதேச சிக்கல்களால் ஐ.டி., சேவைகளின் தேவை குறைந்து உள்ளதாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ., ஸ்ரீனி பால்லியா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, ஜூன் காலாண்டிலும் வருவாய் வளர்ச்சி மைனஸ் 2 முதல் 0 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் என்ற கணிப்பு, முதலீட்டாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

Source link