புது டெல்லி பிரகடனத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

பிரிக்ஸ் அமைப்பின் 18வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று (12.09.2026) மதியம் தொடங்கியது. இந்தியா தலைமை தாங்கிம்  இந்த மாநாடு மொத்தம் 2 நாள்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், “பிரிக்ஸ் புது டெல்லி பிரகடனம் 2026இன் வரைவு நமது முன் உள்ளது. இது நமது விவாதங்களின் சாரத்தை உள்ளடக்கியதுடன், முக்கிய உலகளாவிய மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்த நமது பார்வைகளையும் பிரதிபலிக்கிறது. 

மேலும், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான முன்னுரிமைகளையும் இது கோடிட்டுக் காட்டுகிறது. எந்தவொரு உறுப்பினருக்கும் இதில் ஆட்சேபனை இல்லை என்றால், இந்த பிரகடனத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம் என்று நான் முன்மொழிகிறேன். எந்தவொரு உறுப்பினராலும் எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை. புது டெல்லி பிரகடனம் 2026 ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.” எனத் தெரிவித்தார். இதனையடுத்து பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது தனது நிறைவுரையைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், “நமது கருத்துக்களின் பன்முகத்தன்மையுடன், பிரிக்ஸ் ஒத்துழைப்பிற்கான நமது அர்ப்பணிப்பும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. 

இன்றைய விவாதம், மாறிவரும் உலகைக் காலாவதியான நிறுவனங்களால் வழிநடத்த முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது; பிரதிநிதித்துவம், பதிலளிக்கும் திறன் மற்றும் விதிகளை உருவாக்குதல் ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் அவசியமானவை. எதிர்கால தொழில்நுட்பங்களின் மேம்பாட்டிலும், அவற்றை நிர்வகிக்கும் விதிகளிலும் குளோபல் சவுத் (வளரும் நாடுகள்) சமமான பங்களிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தினோம். முடிவுகளுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் இடையே உள்ள இடைவெளி கூட்டாண்மை மற்றும் கூட்டு நடவடிக்கை மூலம் களையப்பட வேண்டும். 

இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட புது தில்லி பிரகடனம் நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டிற்குத் தெளிவான திசையை வழங்குகிறது. இந்த தீர்மானங்களை உறுதியான முடிவுகளாக மாற்றுவது இனி நமது பொறுப்பாகும். பிரிக்ஸ் அமைப்பின் தலைவர் என்ற முறையில் உங்களின் மதிப்புமிக்க பங்களிப்புகள், ஆக்கப்பூர்வமான அணுகுமுறை மற்றும் அர்ப்பணிப்புக்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். முன்னதாக இந்த மாநாட்டில், பிரிக்ஸ் அமைப்பின் 20 ஆண்டுகளை நினைவுபடுத்தும் வகையில் பிரதமர் மோடி இரண்டு தபால் தலைகளை வெளியிட்டார்.

Source link