தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று (சனிக்கிழமை) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் உள்ளிட்ட 19 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என். நேரு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தொடர்பான தகவல் அறிந்து தற்போது தில்லை நகர் வீட்டிற்கு கே.என். நேரு வந்துள்ளார். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட தி.மு.க.-வினர், கே.என். நேருவின் இல்லம் முன்பு குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
ஏற்கனவே கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாகச் சோதனை நடத்தியிருந்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் தி.மு.க முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே.என். நேரு வீடுகளில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டாலின் கண்டனம்
இந்நிலையில், தி.மு.க முன்னாள் அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே.என். நேரு வீடுகளில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் திரு. கே.என். நேரு அவர்கள் மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.
ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் திரு. கே.என். நேரு அவர்கள் மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.
ஆட்சி அமைக்க…
— M.K.Stalin (@mkstalin) September 5, 2026
இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு. திரு. கே.என். நேரு அவர்களும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்.” என்று தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
