பெங்களூருவில் 5 முக்கிய மேம்பாலங்களில் இந்த வாகனங்களுக்குத் தடை: செப்டம்பர் முதல் புதிய விதிகள் அமல்

சாலை விபத்து வழக்குகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை ஆய்வு செய்த பிறகு, நகரில் உள்ள ஐந்து முக்கிய மேம்பாலங்களில் சில குறிப்பிட்ட வாகனங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த பெங்களூரு போக்குவரத்துப் காவல்துறை முடிவு செய்துள்ளது. இது செப்டம்பர் 4 முதல் அமலுக்கு வருகிறது.

ஆங்கிலத்தில் படிக்க:

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், பி.ஜி.எஸ் மேம்பாலம், பீன்யா உயர்மட்ட மேம்பாலம், எலக்ட்ரானிக் சிட்டி உயர்மட்ட மேம்பாலம், டபுள் டெக்கர் மேம்பாலம் (சில்க் போர்டு முதல் ராகிபுட வரை) மற்றும் சர்வதேச விமான நிலைய மேம்பாலம் (சஞ்சீவ் நகர் கிராஸ் முதல் வித்யாசில்ப் சந்திப்பு வரை) ஆகிய ஐந்து பாலங்களில் இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என போக்குவரத்துப் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பெங்களூரு போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையர் கார்த்திக் ரெட்டி கூறுகையில், “சாலை பாதுகாப்பு, வீதியின் வடிவமைப்பு மற்றும் மேம்பாலத்தின் அகலம், விபத்துகளின் தீவிரத்தைக் குறைத்தல், வாகன பழுதுகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சீரமைத்தல், மேம்பாலங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் ஏற்படும் நெரிசலைக் குறைத்தல், அவசரக்கால போக்குவரத்து மேலாண்மை, பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மற்றும் விரிவான சாலை பாதுகாப்பு அணுகுமுறை ஆகிய முக்கிய காரணிகளைக் கருத்தில் கொண்டே இக்கட்டுப்பாடுகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

பி.ஜி.எஸ் மேம்பாலம்:

கனரக சரக்கு வாகனங்கள் இந்த மேம்பாலத்தைப் பயன்படுத்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பிற இலகுரக சரக்கு வாகனங்கள் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இதைப் பயன்படுத்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பீன்யா உயர்மட்ட மேம்பாலம்:

பயணிகள் மற்றும் சரக்கு ஆட்டோ ரிக்ஷாக்கள் செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கனரக மற்றும் நடுத்தர சரக்கு வாகனங்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இந்தப் பாதையைப் பயன்படுத்த அனுமதி இல்லை.

சர்வதேச விமான நிலைய மேம்பாலம்:

இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் இந்த மேம்பாலத்தில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான சரக்கு வாகனங்களின் இயக்கத்திற்கும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

டபுள் டெக்கர் மேம்பாலம்:

இந்த மேம்பாலத்தில் கனரக சரக்கு வாகனங்கள் செல்லப் போக்குவரத்துப் காவல்துறை முற்றிலும் தடை விதித்துள்ளது.

எலக்ட்ரானிக் சிட்டி உயர்மட்ட மேம்பாலம்:

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சரக்கு வாகனங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள்/சரக்கு ஆட்டோ ரிக்ஷாக்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்துவதற்கு முற்றுப்புள்ளியாக முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற அனைத்து மேம்பாலங்களிலுமான கட்டுப்பாடுகள் செப்டம்பர் 4 முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், எலக்ட்ரானிக் சிட்டி உயர்மட்ட மேம்பாலத்திற்கான கட்டுப்பாடுகள் செப்டம்பர் 11 முதல் அமலுக்கு வரும் என்று போக்குவரத்துப் காவல்துறை தெரிவித்துள்ளது.

Source link