வருவாயை பெருக்க ஆக்கப்பூர்வ திட்டம் இல்லை: பழனிசாமி அதிருப்தி

கோவை: முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசில், வருவாயை பெருக்க ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை,” என, அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி தெரிவித்தார்.

கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஆட்சி பொறுப்பேற்ற, 110 நாட்களில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது. தமிழக அரசுக்கு, அதிகமான கடன் இருக்கிறது. ஆனாலும், அதிகமான சலுகைகளை கொடுக்கிறார்கள். கடந்த ஆட்சியில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன். அப்படி இருக்கும் போது, தற்போதைய த.வெ.க., அரசு வருவாயை பெருக்க ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை.

த.வெ.க.,வினர் எப்போதும் ஊழல் என்று தான் சொல்கின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் பணத்தை கைப்பற்றியுள்ளனர். சோதனை நடத்திய இடங்களில் பிடிபட்டது என்றால், சோதனை நடத்தப்படாத இடங்களில் லஞ்சம் பெறுகின்றனர் என கருதலாமா? அப்படி இருக்கும்போது, துாய்மையான ஆட்சி என எப்படி சொல்ல முடியும்?

த.வெ.க.,வினர் ‘ரீல்ஸ்’ போட்டே வண்டியை ஓட்டுகிறார்கள். அவர்களிடம் ‘ரியல்’ எதுவும் இல்லை. விஜய் அடுத்த பிரதமராக மட்டுமல்ல, டிரம்புக்கு பதிலாக, அமெரிக்க ஜனாதிபதியாக கூட ஆகட்டும்; இந்தியாவின் ஜனாதிபதி கூட ஆகட்டும். ஆனா, ‘ரீல்ஸ்’ விட்டு ஆக முடியாதே? இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

வரவேற்க வராத வேலுமணி

நேற்று கோவை விமான நிலையம் வந்த அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமியை, முன்னாள் அமைச்சர் வேலுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ஜுனன், ஜெயராம், செல்வராஜ், அருண்குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஆனால், பழனிசாமியின் தலைமைக்கு எதிராக செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் வேலுமணி வரவில்லை.

Source link