சென்னை மாநகரில் வடகிழக்குப் பருவமழை மற்றும் எதிர்பாராத இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்காக ‘நம்ம சென்னை’ செயலி புதுப்பிக்கப்பட்டு, தன்னார்வலர்கள் தங்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் நேரடியாகப் பதிவு செய்து சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பங்கெடுக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் நம்ம சென்னை செயலியைப் பதிவிறக்கம் செய்து, பதிவு செய்த கைபேசி எண் மூலம் உள்நுழைந்து (Volunteer Registration) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தனிநபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் அல்லது தொண்டு நிறுவனங்கள் என மூன்று பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின்கீழ் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது தங்களின் முந்தைய பேரிடர் மேலாண்மை அனுபவங்கள், அடையாளச் சான்று மற்றும் அவர்கள் சேவை செய்ய விரும்பும் பகுதி அல்லது மண்டலம் குறித்த விவரங்களை வழங்க வேண்டும்.
மக்களின் திறமை மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப, பேரிடர் காலங்களில் அவர்களைப் பயன்படுத்தி மாநகராட்சி நிர்வாகம் பணிகளை ஒருங்கிணைக்கும். முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெறப்பட்ட வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
