நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு சபலென்கா, அல்காரஸ் முன்னேறினர்.
நியூயார்க்கில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் 4வது சுற்றில், பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் மோதினர். ‘நடப்பு சாம்பியன்’ சபலென்கா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 6வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு 4வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 6-4 என ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவை தோற்கடித்தார். அமெரிக்காவின் எம்மா நவரோ 6-4, 6-2 என ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயாவை வென்றார். செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவா 7-5, 5-7, 6-4 என உக்ரைனின் மார்டா கோஸ்டியுக்கை வீழ்த்தினார்.
அல்காரஸ் அசத்தல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் ‘நடப்பு சாம்பியன்’ ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பால் மோதினர். இதில் அல்காரஸ் 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 5வது முறையாக காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு 4வது சுற்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-2, 6-3, 6-4 என கிரீசின் ஸ்டெபானஸ் சிட்சிபாசை வென்றார். ரஷ்யாவின் டேனியல் மெத்வெடேவ் 6-7, 4-6, 6-7 என அமெரிக்காவின் பிரான்சஸ் டியாபோவிடம் தோல்வியடைந்தார். அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்செல்சன் 7-6, 6-4, 6-4 என, அர்ஜென்டினாவின் தாமஸ் மார்டின் எட்செவெரியை தோற்கடித்தார்.
பாலாஜி ஜோடி தோல்வி
ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, அமெரிக்காவின் இவான் கிங் ஜோடி 4-6, 5-7 என பிரான்சின் எட்வார்ட் ரோஜர்-வாசெலின், மொனாகோவின் ஹுகோ நிஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
