மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி உதயம் ஒருங்கிணைப்பாளராக முதல்வர் விஜய் நியமனம்

சென்னை: த.வெ.க., – காங்கிரஸ் – வி.சி.க., – ம.தி.மு.க., மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இணைந்து, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியை உருவாக்கிஉள்ளன. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக, முதல்வர் விஜய் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்த கட்சிகள் இணைந்த புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான முதல் கட்ட ஆலோசனை, சென்னை அருகே கோவளத்தில், ஜூலை, 1ம் தேதி நடந்தது.

அதில், ம.தி.மு.க.,வும் இடம் பெற்றது. அப்போது, கூட்டணிக்கு பெயர் வைப்பது, தலைவர், ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒருமித்த கருத்து ஏற்படாததால் முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்தில், இரண்டாவது ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில், முதல்வர் விஜய், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, வி.சி.க., தலைவர் திருமாவளவன், முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாலை, 4:00 மணிக்கு ஆலோசனை கூட்டம் துவங்கியது. இரண்டு மணி நேரம் நடந்த ஆலோசனையில், கூட்டணிக்கு பெயர் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என்று பெயரிடப்பட்டது. குறைந்தபட்ச செயல் திட்டங்களும் வகுக்கப்பட்டன.

ஒப்புதல் கூட்டணியின் தலைவர் பதவிக்கு, வைகோ மற்றும் திருமாவளவன் இடையே பலத்த போட்டி நிலவியது. இதையடுத்து, கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக முதல்வர் விஜய் தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்த மாதம், 6ம் தேதி, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், த.வெ.க.,வுக்கு ஆதரவ ளிக்க, இக்கட்சிகள் ஒப்புதல் அளித்தன. தேர்தல் பிரசார கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் இணைந்து பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கு பின், கூட்டணி தலைவர்கள் மாணிக்கம் தாகூர், வைகோ, திருமாவளவன், காதர் மொய்தீன் கூட்டாக பேட்டியளித்தனர்.

அதன் விபரம்:

மாணிக்கம் தாகூர்: கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக, முதல்வர் விஜய் செயல்படுவார். இந்தக் கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படும். கூட்டணியில் புதிய கட்சிகள் வருவதற்கும் வாய்ப்புள்ளது. கூட்டணியின் பெயரிலேயே பலமான அர்த்தங்கள், செயல் திட்டமும் உள்ளது.

‘இண்டி’ கூட்டணியின் ஒரு அங்கமாக, இந்த கூட்டணி செயல்படும். தமிழக உரிமைகளுக்காக, இந்த கூட்டணி தொடர்ந்து போராடும். எம்.பி.,க்களை வைத்துள்ள கட்சிகள், இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

லோக்சபா தேர்தல் நேரத்தில், இண்டி கூட்டணி பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவார். அப்போது, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி, ராகுலுக்கு ஆதரவு அளிக்கும்.

திருமாவளவன்: இதுவரை ஆதரவு கட்சிகளாக இருந்த நாங்கள், இன்று முதல் கூட்டணி கட்சிகளாக பரிணாமம் அடைந்துள்ளோம். மதச்சார்பற்ற தன்மை, சமூக நீதி ஆகியவை தான் இந்த கூட்டணியின் குறிக்கோள்; கோட்பாடு.

உள்ளாட்சி தேர்தல் மதச்சார்பின்மையை அகில இந்திய அளவில் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அந்த புரிதலுடன் கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என, லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, பல தேர்தல்களை இணைந்து சந்திக்க இருக்கிறோம் .

வைகோ: கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டங்களை, மாவட்ட அளவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில், த.வெ.க., எடுக்கும் முடிவின்படி, வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறோம்.

அப்போது நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைவர்களுக்கு சுடச்சுட சிற்றுண்டி

கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன், அக்கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகளும் வந்திருந்தனர். அவர்களுக்கு த.வெ.க., தலைமை அலுவலகத்தில் சுடச்சுட உணவுகள் தயாரித்து, மாலை சிற்றுண்டியாக பரிமாறப்பட்டன.

மிளகு முந்திரி வறுவல், ஜூஸ், டீ, காபி, வெஜ் ரோல், மைசூர் போண்டா, தயிர் வடை, சாம்பார் வடை, பட்டர் பெசரட் தோசை, சாம்பார், மூன்று வகை சட்னி, பாதம் அல்வா போன்றவை பரிமாறப்பட்டன. நட்சத்திர ஹோட்டலில் இருந்து, சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, இந்த உணவுகள் தயாரிக்கப்பட்டன.

Source link