பட்டிமன்ற நடுவரும், தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா (வயது 90) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (11-09-26) காலமானார். இவரது மறைவிற்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பேராசிரியர் சாலம் பாப்பையா தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய பங்களிப்பை போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று நடைபெறும் அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், ‘தமிழறிஞர் அய்யா சாலமன் பாப்பையா அவர்களுக்கு அரசு மரியாதை’ எனப் பதிவிட்டுள்ளார்.
‘அன்புப் பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே.. இனிய குழந்தைகளே..’ என்ற சொற்றொடருக்கு சொந்தக்காரரான இவர், தமிழ் இலக்கியத்திற்கும் பட்டிமன்றக் கலைக்கும் ஆற்றிய தொண்டால் தமிழக மக்களிடம் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த சூழலில் அவரது மறைவு தமிழ் உலகிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
