குறிப்பாக மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்று முதல்வர் விஜய் குற்றம் சாட்டியிருப்பது தமிழக அரசியலில் பேருபொருளாக மாறியுள்ளது. முதல்வர் விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், மிசா காலத்தில் தனக்கு நடந்த அடக்குமுறைகளைப் பற்றி பேசிய அவர், சர்க்காரியா கமிஷன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்தார். இதையடுத்து மு.க.ஸ்டாலினுக்கு தவெக பதிலடி கொடுக்க, அதற்கு திமுக மீண்டும் பதிலடி கொடுக்க என இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் 100% அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்படவில்லை என துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய துரை வைகோ, “நாட்டுடைய பாதுகாப்பை கருதி மிசா எனும் அவசர கால சட்டத்தை 1975இல் காங்கிரஸ் கொண்டு வந்தது. அப்போது மிகப்பெரிய ஒடுக்குமுறை நடந்ததது. காங்கிரஸ் அல்லாது பிற இயக்கங்களைச் சார்ந்த எதி்கட்சி தலைவர்களை கைது செய்தார்கள். அது வரலாற்றுப் பிழை என்பதில் மாற்று கருத்தே கிடையாது. இனிமேல் அந்த மாதிரி ஒடுக்குமுறை சட்டங்களை கொண்டு வரக்கூடாது என்பது மிசா சட்டம் என்பது எடுத்துக்காட்டு. அதே வேளையில் மிசா சட்டத்தில் செய்யப்பட்ட கைதுகள் அரசியல் காரணங்கள் மட்டுமில்லாது, ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தொடர்புடையவர்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிற அளவில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீதும் மிசா சட்டத்தில் கைது செய்தார்கள்.
மிசா சட்டத்தில் அன்றைய தமிழ்நாட்டில் திமுகவில் நடந்த முதல் கைது எங்கள் தலைவர் வைகோ தான். இது ஒரு வரலாற்று உண்மை. இதில் யார் சொல்வது உண்மை என்று இன்றைக்கு நான் பல பேரிடம் கேட்கும் போதும், பழைய செய்தி குறிப்புகளை பார்க்கும் போதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் கைதானது உண்மை தான். ஆனால் 100 சதவீதம், அரசியல் காரணங்களுக்காக அவர் கைது செய்யப்படவில்லை. அரசியல் நாகரீகம் கருதி நான் சொல்ல தேவையில்லை அன்றைக்கு 100% அரசியல் காரணமாம அவர் கைது செய்யப்பட்டாரா என்று கேட்டால் இல்லை என்று சொல்வேன்” என்று கூறினார்.
