தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் நிலையில், பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்க்க வந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழக சட்டசபையில் த.வெ.க ஆட்சி அமைந்து முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி தொடங்கியது. முதல்நாளில் பொது பட்ஜெட், 2-வது நாளில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில், பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. தற்போது துறைவரியாக மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதில் அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் இன்று, முக்கியத் துறைகளான காவல்துறை மற்றும் தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதேபோல் சென்னை ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதேபோல், காவல்துறை தொடர்பான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளதால், முதல்வர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும், எதிர்க்கட்சிகள் சார்பில் எழுப்பப்படும் கேள்விகள் குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்க்க வந்த இன்பநிதி#CMVijay | #TNAssembly | #DMK | #Assembly | #PuthiyathalaimuraiTvpic.twitter.com/KyvnJKcOCX
— PttvOnlinenews (@PttvNewsX) September 3, 2026
சட்டசபையின் தினசரி நிகழ்வுகள் பெரிய எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த பரபரப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சட்டசபை நிகழ்வுகளை நேரில் பார்ப்பதற்காக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேரனும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதி திடீரென தலைமைச் செயலகத்திற்கு வந்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சட்டமன்றத்தின் பார்வையாளர் மாடத்திற்குச் சென்று (Visitors’ Gallery), அங்கு அமர்ந்து தனது தந்தை உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகக் காவல்துறை மானியக் கோரிக்கைகள் குறித்துப் பேசுவதையும், அதற்கு ஆளுங்கட்சித் தரப்பில் அளிக்கப்படும் பதில்களையும் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்.
முதல்வராக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தோல்வியை சந்தித்ததால், உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில், பார்வையாளராக இன்பநிதி சட்டசபைக்கு உள்ளே வந்துள்ளது குறித்து அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
