மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை, என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது
”மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாத அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்,
தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி, வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மு.க. ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பதுதான் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்றுதான் பலரும் கூறி வருகின்றனர்.
மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்டிருக்கும். ஆனால், ஸ்டாலினுக்கு அத்தகைய உத்தரவு வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை காட்டப்படவில்லை.
சில சாட்சிய ஆவணங்களையோ, முரசொலியில் வெளியான செய்திகளையோ அல்லது ஏதாவது ஒரு புத்தகத்தையோ ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஒரு பத்திரிகைச் செய்தியையோ, புத்தகத்தையையோ மட்டுமே வைத்து ஒருவரைத் தியாகி என்று ஏற்றுக்கொள்ள முடியாது.
கைது செய்யப்பட்டதற்கான தடுப்புக்காவல் ஆவணம் இல்லாத ஒரே தியாகி ஸ்டாலினாகத்தான் இருப்பார். 1989-ல் ஆட்சிக்கு வந்த பிறகு இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இரா. செழியன் மொழிபெயர்த்த சர்க்காரியா கமிஷன் தொடர்பான புத்தகத்தில்கூட ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை. 30, 40 ஆண்டுகளாக இந்த விவகாரம் சர்ச்சையாக இருந்தும், இதுவரை தெளிவான ஆதாரத்தை அவர்களால் வழங்க முடியவில்லை.
எனவே, ஸ்டாலினை மீண்டும் மீண்டும் மிகப்பெரிய தியாகியாக சித்தரிப்பதால் எந்தப் பயனும் இல்லை. இதை மக்கள் நம்பவும் மாட்டார்கள்.
இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து விமர்சனம்
இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பரந்தாமன், எக்மோர் தொகுதியில் இருந்த காலத்தில் தொகுதி பக்கமே செல்லாதவர். உள்ளூரிலேயே செல்வாக்கு இல்லாத ஒருவரை மதுராந்தகத்தில் கொண்டு வந்து வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.
உள்ளூரில் போட்டியிட ஆள் இல்லாததால்தான் வெளியூரைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். நாளை தேர்தலில் டெபாசிட் இழக்க நேரிட்டால், அதற்கு வெளியூர் வேட்பாளரை நிறுத்தியதுதான் காரணம் என்று கூறுவதற்கான சூழலை திமுக உருவாக்கிக் கொள்கிறது.
திமுகவும் அதிமுகவும் ‘திருமங்கலம் ஃபார்முலா’ பாணியில் ரூ.100 கோடி, ரூ.200 கோடி என பணத்தை வாரி இறைத்து மக்களை ஏமாற்ற முயன்றாலும், மக்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதில் தெளிவான முடிவை எடுப்பார்கள்.
மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு தேர்தலைச் சந்தித்தாலும், மக்கள் இவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் சரி, இந்த இடைத்தேர்தலிலும் சரி, இரு கட்சிகளுக்கும் டெபாசிட் கூட கிடைக்காது” என்றார்.
எதிர்க்கட்சிகளின் போராட்டம் குறித்து பேசிய நிர்மல் குமார்,
”எதிர்க்கட்சியினர் எதற்காகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்றே தெரியாமல் போராடுகிறார்கள். அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் போராட்டம் நடத்துவார்கள் என்றால், தாராளமாக நடத்தட்டும்.
சட்டப்பேரவையில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து பொதுமக்கள் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். போராட்டக் களம் அமைத்துக் கொடுத்தாலும் 50 பேர் கூட சேர மாட்டார்கள். இவர்களின் போராட்டங்களைக் கண்டு மக்கள் கடந்து சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் குறித்து பேசிய அவர்,
”முதலமைச்சரின் பயணம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், தொழில்துறையை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டதாகும். சர்வதேச அளவிலான ஃபார்முலா பந்தயம் உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்வதும், பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதுமே இதன் முதன்மை நோக்கமாகும்.
ஒவ்வொரு நிறுவனத்துடனும் சந்திப்பு முடிந்த பிறகு, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முறையாக வெளியிடப்படும்” என்றார்.
