புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், வாஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், காரைக்கால் மாவட்டம் போலாகம் கிராமத்தில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
துறைமுகத்தை தற்போதுள்ள 650 ஏக்கர் பரப்பளவில் இருந்து 3,000 ஏக்கராகவும், துறைமுகத்தின் ஆழத்தை 48 அடியில் இருந்து 60 அடியாகவும், சரக்கு கையாளும் திறனை 21.5 மில்லியன் டன்னில் இருந்து 100 மில்லியன் டன்னாகவும் விரிவாக்கம் செய்வது தொடர்பாக இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் காரைக்கால், பட்டணம்சேரி, டி.ஆர். பட்டினம், வாஞ்சூர், நாகூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள், மீணவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அதானி பங்கேற்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி கூட்டத்தில் பேசத் தொடங்கியபோது, அவரைப் பேச விடாமல் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், விரிவாக்கத் திட்டம் தொடர்பான அறிக்கையை வாசிக்கக் கூடாது எனக் கூறி பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரும்புத் தடுப்புகளை அகற்றி, கூட்ட அரங்கிற்குள் சென்று மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட பொதுமக்கள் முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியர் மேடையில் இருந்தபோதும், கருத்துக் கேட்புக் கூட்டத்தை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கூட்டம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், அதானி துறைமுக விரிவாக்கத்தை மேற்கொள்ளக் கூடாது என பொதுமக்கள் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர். எஸ். ஆனந்த்குமார், அதானி துறைமுகத்தின் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, துறைமுகத்தின் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும் அவர் மாவட்ட ஆட்சியரிடம் குற்றம் சாட்டினார்.
மேலும், அதானி துறைமுக விரிவாக்கம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிக்கை சட்டவிரோதமானது, போலியானது மற்றும் மோசடியானது என்று அவர் குற்றம் சாட்டினார். மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மீன்வளத்தையும் பாதிக்கக்கூடிய இந்தத் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், புதுச்சேரி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்றும் சமூகச் செயல்பாட்டாளர் காளியம்மாள் ஆவேசமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
கூட்டத்தில் மேலும் பலர் துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராகப் பேசினர். ஒரே ஒரு பெண் சிலரின் தூண்டுதலின் காரணமாக திட்டத்திற்கு ஆதரவாகப் பேசியதாகவும், அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. யார் அவரை தூண்டினார் என்று கண்டறிய மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் கூட்ட அரங்கில் பரபரப்பு நிலவியது.
மேலும், கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டி.ஆர். பட்டினம் மற்றும் போலாகம் பகுதிகளில் பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். கருத்துக் கேட்புக் கூட்டத்தில் துறைமுக விரிவாக்கத்திற்கு ஆதரவாக ஒருவர் கூட பதிவு செய்யவில்லை; அனைவரும், தங்களது எதிர்ப்பைத் தெரிவித்ததால் கூட்டத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவியது.
