தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும், சிறப்பான குரல் வளத்துடன் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள நிலையில், சில பாடல்களுக்கு முக்கியமான வார்த்தைகளையும் கொடுத்துள்ளார் என்று அவரது நெருங்கிய நண்பரும் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் கூறியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் ஆரம்பகால இசைப் பயணத்தில், அவருடன் கச்சேரிகளில் பாடியவர் தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இளையராஜாவுக்கு முன்பே பாடகராக அறிமுகமான எஸ்.பி.பி, தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆர் படம் தொடங்கி ரஜினிகாந்த் வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ள எஸ்.பி.பி, கமல்ஹாசன் உள்ளிடட சில நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.
குறிப்பாக கமல்ஹாசன் நடித்த பல படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யும்போது அதற்கு குரல் கொடுப்பவர் எஸ்.பி.பி. தான் மேலும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள எஸ்.பி.பி, சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். கொரோனா காலத்தில் அவர் இறந்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் மூலம் இன்றும் மக்கள் மனத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அவரை பற்றி பிரபலங்கள் பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஒரு பேட்டியில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது ஒரு பாடலுக்கு முக்கியமான வார்த்தை கொடுத்தார் என்று கூறியுள்ளார். 1980-ம் ஆண்டு ரஜினிகாந்த் 2 வேடங்களில் நடித்து வெளியான படம் தான் ஜானி. ஸ்ரீதேவி, தீபா ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்த இந்த படத்தில், இடம் பெற்ற ஒரு பாடலை கங்கை அமரன் சிறப்பாக எழுதியுள்ளார். ஆனால், முதல் வார்த்தை புதுமையான வேற்று மொழி வார்த்தையாக இருக்க வேண்டும் என்று இளையராஜா கூறியுள்ளார்.
இதற்கு என்ன எழுதலாம் என்று கங்கை அமரன் யோசிக்கும்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அங்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் ஏய் பாலு இதற்கு ஏதாவது வார்த்தை சொல்லேன் என்று கங்கை அமரன் கேட்க, பாடலை படித்து பார்த்த எஸ்.பி.பி முன்னாடி சென்யோரிட்டா என்று போட்டுக்கொள் என்று கூறியுள்ளார். அவர் சொன்னடியே பாடலில் சேர்த்துள்ளார். அந்த பாடல் தான் சென்யோரீட்டா ஐ லவ் யூ என்ற பாடல். இந்த தகவலை கங்கை அமரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
