“முதல்வர் விஜய்யின் உடல்மொழி, மனித மாண்புகளுக்கு எதிரானது”

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது அவர், கடந்த கால திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டுத் திமுகவினர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதில் முதல்வர் விஜய் மிசா குறித்து பேசும் போது, திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினைச் சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாகப் உடல்மொழி செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வரின் உடல்மொழி, மனித மாண்புகளுக்கு எதிரானதாகும் என விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “காவல்துறை மானியத்தில் முதல்வர் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்வருமான ஸ்டாலினைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் ‘அது உள்நோக்கம் கொண்டதல்ல’ என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற உடல்மொழிகள் கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம். 

எந்தவொரு  சூழலிலும் ஒருவரின் தன்மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை. அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும்.

முதல்வரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது  இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும். மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும். அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

Source link