தெலுங்கானா மாநிலத்தின் வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் கொண்டா சுரேகா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக இன்று (03-09-26) முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அமைச்சர் சுரேகாவின் மகளும், காங்கிரஸ் உறுப்பினருமான சுஷ்மிதா கடந்த ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, முதல்வர் ரேவந்த் மற்றும் அவரது சகோதரர் சின்னா ஆகியோர் குறித்து கடுமையாகச் சாடியிருந்தார். அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்த சுஷ்மிதா, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரையும் கடுமையாகச் சாடியிருந்தார்.
இது தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக, கடந்த 2025 ஆம் ஆண்டு முதல்வர் ரேவந்த் குறித்து அவதூறான கருத்துக்களை சுஷ்மிதா தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் அதே போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, அவர் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வந்த நிலையில், அவரது தாயார் சுரேகா மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசியலில் தன்னை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் சுஷ்மிதா இவ்வாறான செயலில் ஈடுபட்டுவருவதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இது சொந்த கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய போதிலும், தனது மகளைக் கண்டிக்கத் தவறியதால் சுரேகா மீது கட்சி இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோருடன் முதல்வர் ரேவந்த் ஆலோசனை நடத்திய பிறகே, இந்த அதிரடியான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
