முதல்வர் ஸ்டாலினுக்கு தினமும் 3 முறை 'கீ' கொடுக்கின்றனர்: அண்ணாமலை விமர்சனம்

திண்டுக்கல்: ”சட்டசபை தேர்தல் முடிந்த பின், தி.மு.க., அமைச்சர்கள் 13 பேர் புழல் சிறைக்கு செல்ல உள்ளனர்,” என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார், பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:

முதல்வர் ஸ்டாலினுக்கு, தினமும் மூன்று முறை ‘கீ’ கொடுக்கின்றனர். காலை 6:00 மணிக்கு வீட்டில் ‘கீ’ கொடுத்ததும், மதியம் வரை டில்லி, டில்லி என்கிறார். மதியம் மறுபடி ‘கீ’ கொடுத்தால், மாலை வரை ஹிந்தி, ஹிந்தி என்கிறார். மாலையில் ‘கீ’ கொடுத்ததும் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்கிறார். ஐந்தாண்டுகளில், இதை தவிர வேறு ஏதேனும் அவர் பேசினாரா?

நடிகர் வடிவேலு, ஒரு படத்தில் சும்மா இருப்பதை எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்பார். அதுபோல, சும்மா இருந்து, ஸ்டாலின் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று நமக்குத்தான் தெரியும். ஐந்து ஆண்டுகளாக சும்மா இருந்து தமிழகத்தை பின்னோக்கி எடுத்துச் சென்று குட்டிச்சுவர் ஆக்கிவிட்டு எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்கிறார்.

டி.ஜி.பி., யை மாற்றியாச்சு, தலைமை செயலரை மாற்றியாச்சு, ஏப்., 23 ல் முதல்வரையும் மாற்றி விடுங்கள். சட்டசபை தேர்தல் முடிந்த பின், தி.மு.க., அமைச்சர்கள் 13 பேர், சென்னை புழல் சிறைக்கு செல்ல உள்ளனர்.

பெண்களின் உரிமை குரல், பார்லியில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக அற்புதமான சட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தால், தி.மு.க., கடுமையாக எதிர்க்கிறது. இதை கருத்தில் கொண்டு தி.மு.க.,விற்கு ஓட்டக்களிக்க கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link