‘கட்டா குஸ்தி’ படத்தைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை 3ஆம் தேதி வெளியானது. இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியிருக்க விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில் நாயகன் விஷ்ணு விஷாலுக்கு பிஎம்டபள்யூ காரும் இயக்குநர் செல்லா அய்யாவுக்கு 10 கிராம் கோல்ட் செயின் மற்றும் பிரேஸ்லெட்டும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 40 கிராமில் வெள்ளி காசும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசாக வழங்கியிருந்தார். இப்படம் தொடர்ந்து 50 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியது. இதனையொட்டி தயாரிப்பு தரப்பில் 50நாள் வெற்றி விழா நடத்தியது. இதில் நடிகர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரபல நடிகர், நடன அமைப்பாளர், இயக்குநர் பிரபு தேவா கலந்து கொண்டார். மேடையில் அவர் பேசியதாவது, “எனக்கும் ஐசரி கணேஷ் சாருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. அவர் கூப்பிட்டவுடன் வந்துவிட்டேன். விஷ்ணு விஷாலுக்கு நான் ஒரு நலம் விரும்பி. அவருடைய மனைவிக்கு நான் பயங்கர ரசிகன். உலகளவில் நன்றாக பேட்மிட்டன் விளையாடுவார். விஷ்ணு விஷால் இந்த படத்துக்கும் மட்டும் இல்லை, இதே 200 சதவீத உழைப்பை எல்லா படத்துக்கும் கொடுக்கிறார். அவர் இன்னும் உயர்ந்த இடத்துக்கு போக வாழ்த்துகிறேன். இந்த சமயத்தில் பார்ட் 1 ஓடுவதே கஷ்டம், ஆனால் பார்ட் 2 எடுத்து ஓட வைத்திருக்கிறார்கள். இயக்குநருக்கு எனது பாராட்டுகள்.
ரொம்ப வருஷம் கழித்து முந்தானை முடிச்சு படத்துல தீபா நடிச்ச டீச்சர் கேரக்டரை போல இந்த படத்துல நடிச்ச மோக்ஷா பிரமலாகியிருக்கார். ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க. அவருக்கு வாழ்த்துகள். ஷான் ரோல்டன் தொடர்ந்து ஹிட் கொடுத்துட்டு வரார். அவர் சேர்ந்ததுக்கு அப்புறம் படம் ஹிட்டாகுதா இல்ல ஹிட்டானதுக்கப்புறம் இவர் சேருறாரான்னு தெரியல. ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்துலையும் கலக்கிட்டாரு. நான் கேடயம்லாம் பார்த்து ரொம்ப வருஷம் ஆகிடுச்சு. இப்ப பார்க்குறதுல ரொம்ப சந்தோஷம். படத்துல வேலை பார்த்த அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.
