முன்னாள் படைவீரர்களுக்கான நிதியுதவி ரூ.6,000 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் பொதுத் துறை முக்கிய அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுத் துறை மானியக் கோரிக்கையின் போது, பொதுமக்கள், அயலகத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய மற்றும் முற்போக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, தாய்நாட்டிற்காகச் சேவையாற்றிய முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் விதவைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 4,000 ஆக இருந்த இந்த நிதியுதவி, இனி ரூ. 6,000 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் நிர்வாகப் பணிகளை எளிதாக்கவும், ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கவும் ரூ. 38 லட்சம் மதிப்பீட்டில் புதிய வலைத்தளச் செயலி ஒன்று உருவாக்கப்பட உள்ளது.

பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவாகத் தீர்க்கும் பொருட்டு, முதலமைச்சரின் உதவி மைய இணையதளத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘சாட்பாட்’ மற்றும் குரல் வழியில் உரையாடும் ‘வாய்ஸ்பாட்’ சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ. 2.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் தலைமைச் செயலகத்திற்கு வரும் மக்கள் இச்சேவைகளை எளிதாகப் பயன்படுத்தும் வகையில், ரூ. 30 லட்சம் செலவில் ‘டிஜிட்டல் கியோஸ்க்குகள்’ அமைக்கப்பட உள்ளன.

முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், அவர்களுக்கான மாதாந்திரப் பணக்கொடை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குடும்பத் தலைவருக்கு ரூ. 1,800, 12 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு ரூ. 1,200 மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ. 600 என உயர்த்தப்பட்ட தொகை வழங்கப்படும். அதேபோன்று, அவர்களின் குழந்தைகளின் உயர்கல்வியைப் ஊக்குவிக்கும் வகையில், கல்வி உதவித்தொகை அனைத்துப் படிப்புகளுக்கும் தலா ரூ. 2,000 உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக இளைஞர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெருக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உலகளாவிய வேலைவாய்ப்புப் பொருத்தத் தளம் உருவாக்கப்பட உள்ளது. மேலும், வெளிநாடுகளில் வேலை தேடும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இலவசமாக ஜெர்மன் மொழிப் பயிற்சியும் வழங்கப்பட இருக்கிறது. சர்வதேச அளவில் வாழும் தமிழர்களின் நலனுக்காகத் தொண்டாற்றும் அயலகத் தமிழர்களைக் கௌரவிக்கும் வகையில், ‘வெற்றித் தமிழர் விருது’ என்ற புதிய விருது இனி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link