யாகாவா ராயினும் நாகாக்க.. மறைமுகமாக சாடிய கனிமொழி!

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய்யை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா, அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரின் பிறப்பு குறித்து பேசியது பல்வேறு தரப்புகளிலும் கண்டனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் திருக்குறளை குறிப்பிட்டு ஆ.ராசாவுக்கு மறைமுக கண்டனம் தெரிவித்திருக்கிறார் எம்பியும், திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி.

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் மோசமான உடல் மொழியுடன் பேசியதாக புகார் எழுந்தது.

அதனை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி தலைமை அறிவுறுத்தியது. அதன்படி தமிழகத்தின் தலைநகரங்களில் திமுகவினர் விஜய்க்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டையில் திமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொது செயலாளரும், எம்பியுமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுக தலைவரின் மிசா கைது குறித்து உங்களுக்கு சந்தேகம் எழுப்பினால், உங்கள் பிறப்பை நான் சந்தேகிக்கிறேன் என பேசினார். அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரை குறிப்பிட்டு ஆ.ராசா பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதை அடுத்து ஆ ராசாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கண்டனம் குவிந்து வருகிறது. திமுக கூட்டணி கட்சிகளும், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆ ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆ.ராசாவின் பெயரை குறிப்பிடாமல் திருக்குறளை வைத்து மறைமுக கண்டனத்தை தெரிவித்திருக்கிறார் திமுக எம்பியும், துணை பொது செயலாளருமான கனிமொழி.

“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.” என்ற திருக்குறளை குறிப்பிட்டு இருக்கும் நிலையில் குறிப்பிட்டு தான் அவர் பேசியிருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதற்கிடையே தனது பேச்சுக்கு தனது பேச்சை திரும்ப பெறுவதாக ஆ.ராசா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.