யானை கழுத்தில் சிக்கிய டயர் அகற்றம்

கவுகாத்தி: கழுத்தில் டயர் சிக்கிய நிலையில், அசாம் வனத்தில் சுற்றிக் கொண்டிருந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்திய வன ஊழியர்கள், டயரை அகற்றினர்.

அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் சுற்றித் திரிந்த யானைக் கூட்டத்தில், ஒரு யானையின் கழுத்தில் டிராக்டர் டயர் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், யானையின் கழுத்தில் சிக்கியிருந்த டயரை அகற்ற முடிவு செய்தனர்.

இதற்காக, யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்றிரவு கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தினர். அதன்பிறகு, யானையின் கழுத்தில் சிக்கியிருந்த டயரை வனத்துறையினர் வெற்றிகரமாக அகற்றினர். வனத்துறையினரின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், வன விலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற கழிவுப் பொருட்களை காடுகள் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் வீச வேண்டாம் என்று தனது எக்ஸ் தளத்தில் ஐஏஎஸ் அதிகாரியும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சுப்ரியா சாகு வலியுறுத்தியுள்ளார்.

Source link