“யூடியூபில் இருந்து சினிமாவுக்கு வருவது எளிதான பயணம் அல்ல”

பாரி இளவழகன் இயக்கி நடித்து ரம்யா ரங்கநாதன், ரம்பா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 17ஆம் தேதி வெளியான படம் ‘அன்பே டயானா’. ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. 

நிகழ்வில் பரிதாபங்கள் கோபி பேசுகையில், “ஒரு திரைப்படம் எவ்வளவு சிறப்பாக உருவாகியிருந்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. ஒரு படத்தை விரும்பினால் உயர்த்தியும், விரும்பவில்லை என்றால் கடந்து சென்றும் விடும் அதிகாரம் உங்களிடம் இருக்கிறது. ஆனால் நல்ல கருத்து கொண்ட ஒரு சிறிய படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெறச் செய்யும் சக்தியும் உங்களிடம்தான் இருக்கிறது. அன்பே டயானா திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருந்தது. அதற்காக மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரையரங்குகளுக்கு மீண்டும் மக்களை வரவழைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். குறிப்பாக மொபைல் திரையில் இருந்து பெரிய திரைக்கு வர வேண்டும் என்ற எங்களின் ஆசையை விட உங்களில் பலரும் விரும்பினீர்கள்.  எங்களின் அந்த முயற்சிக்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அளித்த ஆதரவு, எங்களைப் போன்ற பல படைப்பாளிகளுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. அதேபோல் சமூக வலைத்தளங்களில் அன்பே டயானா குறித்து தொடர்ந்து பதிவிட்டு, படத்தை கொண்டாடிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களின் ஆதரவு இல்லாமல் ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினமான ஒன்றாகிவிட்டது.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னால் தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷின் பங்களிப்பு மிகப்பெரியது. ஒரு நல்ல படத்தை தயாரிப்பது ஒரு கலை என்றால், அதை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் அதே அளவுக்கு பெரிய கலை. குட்நைட், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களை அவர் மக்களிடம் கொண்டு சென்ற விதத்தை நான் பார்த்திருக்கிறேன். அதே அர்ப்பணிப்புடன் அன்பே டயானா திரைப்படத்தையும் மக்களிடம் கொண்டு சென்றுள்ளார். அதற்காக அவருக்கு என் பாராட்டுகள். இந்தப் படத்தில் நான் நடித்திருந்தாலும், இந்த வெற்றியின் முழு பாராட்டும் இயக்குநர் பாரி இளவழகனுக்கே சேர வேண்டும். அவர் எழுதிய கதையையும், உருவாக்கிய கதாபாத்திரத்தையும் நான் அவர் சொன்னபடி திரையில் வெளிப்படுத்த முயன்றேன். இந்தப் படத்தின் ஆன்மா முழுவதும் அவருடைய எழுத்தும், இயக்கமும்தான்.

யூடியூப் போன்ற தளங்களில் இருந்து நேரடியாக சினிமாவுக்கு வருவது எளிதான பயணம் அல்ல. அதைவிட, இயக்குநராக தன்னை நிரூபிப்பது இன்னும் பெரிய சவால். அந்த சவாலை முழு அர்ப்பணிப்புடனும், சினிமா மீதான காதலுடனும் எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கும் பாரி இளவழகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படத்தின் மூலம் சினிமாவை அணுகும் விதம், கதாபாத்திரத்தை புரிந்துகொள்ளும் முறை என பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். இந்த அனுபவம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என்றார். 

Source link