பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்’ அமைப்பை உருவாக்கின. இதனையடுத்து கடந்த 2024ஆம் ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் இந்த அமைப்பில் இணைந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு (2025) இந்தோனேசியாவுடன் சேர்த்து மொத்தம் 11 நாடுகளுடன் இந்த அமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. இத்தகைய சூழலில் தான் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை (12.09.2026) மற்றும் நாளை மறுநாள் (13.09.2026) என இரு நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளனர். இதையொட்டி, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் தலைவர்கள் தங்கும் ஹோட்டல்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு நாள் மாநாட்டில் உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்கள், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு, மற்றும் உறுப்பு நாடுகளுக்கிடையேயான பொருளாதார, கலாச்சார உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆழமான விவாதங்கள் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் நரேந்திர மோடி இன்று (11.09.2026) சந்தித்துப் பேசினார். அப்போது அதிபர் புதினுக்கு, பிரதமர் மோடி திருக்குறள் புத்தகம் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். மேலும் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி அந்த பதிவில், “மாபெரும் திருவள்ளுவரின் அழியாத ஞானத்தை மொழிகள் மற்றும் எல்லைகளைக் கடந்து கொண்டு சேர்க்கும் திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பை அதிபர் புதினுக்கு பரிசளித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்த அந்நாட்டு புதினை, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கேவி சிங்க் வரவேற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியன், தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசா, இந்தோனேசியா அதிபர் சுபியாந்தோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
