காங்., தலைவர் ராகுல் உத்தரப் பிரதேசத்தின் ரேபரலி தொகுதி எம்.பி.,யாக உள்ளார். தொகுதி வளர்ச்சி திட்டங்கள் குறித்து, சமீபத்தில் இந்த மாவட்ட கலெக்டர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்; இதில் எம்.பி., — எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
‘என் தொகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன’ என்று புகார் கூறிய ராகுல், இது தொடர்பான ஒரு காணொளியை கலெக்டருக்கு காட்டினார். அதை பார்த்த கலெக்டர், ‘இது இந்த தொகுதி சாலை அல்ல’ என, பதில் அளிக்க, ராகுல் கோபப்பட்டார்.
உடனே ராகுல் வேறொரு விஷயத்தை ஆரம்பித்தார்… ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்கிற கோஷத்துடன் சிசு கொலையை தடுக்க புதிய திட்டத்தை ஹரியானாவில் ஜனவரி, 2015ல் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி. இந்த திட்டம் உத்திரப்பிரதேசத்தில் சரிவர செயல்படவில்லை’ என குற்றஞ்சாட்டினார்.
‘நான் ஒரு பெண்… போராடுவேன் என உ.பி.,யில் சவால் விட்ட உங்கள் சகோதரி பிரியங்கே எங்கே? ஏன் கேரளத்திற்கு ஓடிவிட்டார்?’ என்று கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ., – எம்.எல்.ஏ., கேள்வி கேட்க, ஆலோசனைக் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது.
‘ராகுல் ஒரு கோபக்கார இளைஞர். இவர் செய்வது அனைத்தும் நாடகம். இவருக்கு உதவி செய்ய ஒரு பெண்மணியும், ஒரு இளைஞரும் உள்ளனர். அவர்கள் என்ன எழுதி தருகின்றனரோ, அதை அப்படியே படிக்கிறார் ராகுல். அதில் என்ன எழுதி உள்ளது என்பதை அவர் புரிந்து படிப்பதில்லை’ என்று, பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.
இதே குற்றச்சாட்டை தான், ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது, எதிர்க்கட்சிகள் கூறின. இப்போது ராகுலும் துண்டு சீட்டைப் பார்த்து தான் படிக்கிறார் போலிருக்கிறது.
‘இண்டி இல்லாமல் வேறு கூட்டணி ஏன்?’
சமீபத்தில், முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில், மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி தொடங்கப்பட்டது. இதில், காங்,, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் காங்., இருந்தாலும், ராகுலுக்கு இதில் வருத்தம் என, சொல்லப்படுகிறது. ‘இதுவரை ஏன் இண்டி கூட்டணியில் விஜய் சேரவில்லை; தனியாக ஒரு கூட்டணியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன?’ என, ராகுல் கோபப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக, டில்லி மூத்த காங்., தலைவர் ஒருவர் தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூரிடம் பேசி, ராகுலின் வருத்தப்படுவதாக சொல்லியுள்ளாராம். ‘இது தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான கூட்டணி மட்டுமே; இந்தியாவிற்கானது அல்ல’ என, சொல்லியுள்ளார் தாகூர்.
மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வை எதிர்த்து காங், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, தேசியவாத காங்., ஆகியவை இணைந்து, ‘மகா விகாஸ் அகாடி’ என்கிற கூட்டணியை உருவாக்கி, சட்டசபை தேர்தலை சந்தித்தன. அதே போல்தான், இந்த தமிழக கூட்டணி என்கிறாராம் மாணிக்கம் தாகூர்.
ஆனால், இந்த பதிலால் ராகுல் சமாதானம் அடையவில்லை. இன்னொரு பக்கம், கூட்டணி தொடர்பாக மாணிக்கம் தாகூர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதால், அவருக்கு முக்கியத்துவம் கிடைத்து விட்டது என்றும், அது, த.வெ.க.,வினருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கூட்டணி துவங்கிய அன்றே பிரச்னைகளும் ஆரம்பித்துவிட்டன.
காவி மயமாகிறதா மேற்கு வங்கம்?
மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த மம்தா பானர்ஜியை தோற்கடித்து, சுவேந்து அதிகாரி முதல்வராகியுள்ளார். உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தைப் போல, சுவேந்துவும் காவி உடை அணிய ஆரம்பித்துவிட்டார். பல சாமியார்களுடன், ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் ஊர்வலம் நடத்தினார். மம்தா முதல்வராக இருந்தபோது, ஜெய் ஸ்ரீராம் என, கோஷமிட்டாலே அவருக்கு பிடிக்காது. இப்போது மேற்கு வங்கம் உ.பி.,யாக மாறி வருகிறதோ என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தங்களுக்கு எதிராக முதல்வர் செயல்படுகிறாரோ என, மேற்கு வங்கத்திலுள்ள சிறுபான்மையினரிடையே ஒரு அச்சம். ‘நான் எந்த ஒரு சிறுபான்மையினருக்கும் எதிரானவன் அல்ல. ஆனால், ஹிந்துவைப் பற்றி பேசிக்கொண்டுதான் இருப்பேன்’ என்று சொல்கிறார் முதல்வர்.
இதனிடையே அடுத்த மாதம் கொல்கத்தாவில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்திற்கு மிகப் பெரிய விழா எடுக்க உள்ளார் சுவேந்து அதிகாரி.
கொல்கத்தாவில் புகழ் பெற்ற ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இது டில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைப் போல இங்கு இடது சாரிகள் மாணவர்கள் படிக்கின்றனர். இதை மாற்ற முயற்சிகள் எடுத்து வருகிறார் முதல்வர். முதல் கட்டமாக இந்த பல்கலைக்கழகத்தின் பெயரை தத்துவ ஞானியும் சுதந்திர போராட்ட வீரருமான அரவிந்தரின் பெயரை சூட்ட முதல்வர் முயற்சிகள் எடுத்து வருகிறார். வழக்கம் போல இதற்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
‘காரிலேயே தனியாக இருவரும் பேசினோம்!’
ஒரு நாட்டு பிரதமரோ அல்லது அதிபரோ மற்ற நாட்டின் தலைவரோடு ஒரு அறையில் எதிர் எதிரே அமர்ந்து ஆலோசனை நடத்துவது வழக்கம். அப்போது மொழி பெயர்ப்பாளர்களும் உடன் இருப்பர். ஆனால் காரில் இரண்டு தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனரா?
பிரிக்ஸ் மாநாட்டிற்காக டில்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி காரில் ஆலோசனை நடத்தியுள்ளது, உலக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லியின் பாரத் மண்டபத்திற்கு புதினுடன் அவரது காரில் சென்றுள்ளார் மோடி.
ஆரஸ் செனட் என்பது ரஷ்ய அதிபர் புடினின் அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்படும் அதி நவீன சொகுசு கார். அமெரிக்க அதிபரின் பீஸ்ட் காருக்கு இணையாக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது இந்த ஆரஸ் செனட். இந்த காரை, புடின் பயன்பாட்டிற்காக டில்லி கொண்டு வந்துள்ளனர்.
‘நான் தான் மோடியை என்னுடன் காரில் வரச்சொன்னேன். இருவரும் ஒன்றாக காரில் பயணித்தது நட்பின் அடையாளம். வழி முழுக்க நாங்கள் பேசிக்கொண்டே வந்தோம். எந்த துணையும் இல்லாமல் பல விஷயங்களை பேசினோம். வேறு சில உலக தலைவர்களுடனும் காரில் பயணித்ததாக மோடி கூறினார்’ என ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.
இப்படி மோடி-, புடின் காரில் ஒன்றாக செல்வது இது மூன்றாவது முறை.
ஈரான் – அமெரிக்க போரால் அதிக அளவில் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்கி வருகிறது இந்தியா. இது அமெரிக்காவிற்கு கோபத்தை உண்டாக்கினாலும், இந்தியா பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவுடன் நல்ல நட்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
