புதுடில்லி: விதிமீறி அலைபேசி பயன்படுத்திய ராஜஸ்தான் மேனேஜர் ரோமி பிந்தருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
அசாமின் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் (ஏப். 10) ராஜஸ்தான் அணி, பெங்களூருவை வீழ்த்தியது. இப்போட்டியில், மைதானத்தில் வீரர்கள் அமரும் பகுதியில் (‘டக் அவுட்’) ராஜஸ்தான் அணி மேனேஜர் ரோமி பிந்தர் அலைபேசி பயன்படுத்தியது உறுதியானது. அருகில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அமர்ந்திருந்தார்.
இது விதிமீறிய செயல் என்பதால், ஷரத் குமார் தலைமையிலான இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) ஊழல் தடுப்பு அமைப்பு விசாரித்தது. இதற்கு விளக்கம் அளிக்கும்படி ரோமிக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பியது. அவரது விளக்கம் திருப்தி அளிக்காததால், ரோமி பிந்தருக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இனி, இதுபோன்ற விதிமீறிய செயல்களில் ஈடுபடக்கூடாது என ரோமி பிந்தருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பிந்தர் மன்னிப்பு: இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் தேவஜித் சைகியா கூறுகையில், ”மைதானத்தில் வீரர்கள் அமரும் பகுதியில் அலைபேசி பயன்படுத்தியது தொடர்பாக ரோமி பிந்தர் அளித்த விளக்கம், பி.சி.சி.ஐ., ஊழல் தடுப்பு அமைப்புக்கு திருப்தி அளிக்கவில்லை. இது, முதல் முறையாக என்பதால் ரூ. ஒரு லட்சம் அபராதத்துடன், எச்சரிக்கப்பட்டார். தனது தவறை ஒப்புக்கொண்ட பிந்தர், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்,”என்றார்.
