நடிகை த்ரிஷா லண்டனில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் பல்வேறு ஊகங்களும் உலா வந்தன. இந்த நிலையில் தற்போது அந்த ஊகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதுப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தனது முதல் தமிழ் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் த்ரிஷாவோடு ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை மலையாளத்தைப் பூர்விகமாகக் கொண்ட இயக்குநர் ராஜா கிருஷ்ணா மேனன் இயக்குகிறார். இவர் மொத்தம் 5 படங்களை இயக்கியுள்ளார். அவை அனைத்தும் பாலிவுட்டில் மட்டும் தான் இயக்கியுள்ளார். இதில் அக்ஷய் குமார் நடித்த ‘ஏர் லிஃப்ட்’ படமும் அடங்கும். இந்த சூழலில் இவரும் தனது முதல் தமிழ் படத்தை இயக்குகிறார்.
இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் சைக்கலாஜிக்கல் ஹாரர் ஜானரில் உருவாகிறது. பெண்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. இதில் இயக்குநருடன் த்ரிஷா கிளாப் போர்ட் வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
