முதல்வர் விஜய்க்கு எதிராக தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய எம்.பி ஆ.ராசா பேசியதற்கு இணையத்தில் கண்டனங்கள் மற்றும் விமர்சனங்கள் அதிகம் வந்துககொண்டிருக்கும் நிலையில், அவருக்கு கேள்வி எழுப்பி தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் எவிடன்ஸ் கதிர்.
தமிழக சட்டசபையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பதிலுரை கொடுத்த முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து தற்போது பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே மிசா குறித்து விஜய் பேசும்போது செய்த ஒரு சைகை தி.மு.க.வினர் மத்தியில்கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விளக்கம் அளித்த முதல்வர் விஜய், தனது எக்ஸ் தளத்தில், சட்டமன்றத்தில் நான் செய்த அந்த சைகை எதேர்ச்சையாக வந்தது. அதற்காக புதிய அரசியல் அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனாலும், தி.மு.க.வினர் இந்த செயலை பரபரப்பாக்கிய நிலையில், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டாரா என்ற கேள்வி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே முதல்வரின் சைகையை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பேசிய தி.மு.க. எம்.பி ஆ.ராசா, மிசா குறித்த அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து பேசினார். அப்போது அமைச்சரை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
அதில் பேசிய ஆ.ராசா, “ஒரு மந்திரி இருக்கிறார். அவர் மந்திரியா எங்கே படித்தார் என்னவென்று தெரியவில்லை. குரங்கு மரத்துக்கு மரம் தாவுகிற மாதிரி தாவி தாவி இங்கு உட்கார்ந்திருக்கிறார். மிசாவில் அடிபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகு, ஸ்டாலின் அடிபட்டதெல்லாம் உண்மை, ஏன் இப்படி அவதூறாக திரிக்கிறீர்கள் என்று சொல்கிறார். அரசியல் சட்டம் வந்து 75வது ஆண்டு விழாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு பெரிய விவாதம் மூன்று நாள் நடந்தது.
இந்த அரசியல் சட்டத்தின் மீது இந்திரா காந்தி எமர்ஜென்சியில் என்னெல்லாம் படுகொலை செய்தார் என்று பா.ஜக பேசினார்கள். திராவிட முன்னேற்ற கழகத்தில் நான் பேசினேன். அதில் மிசாவில் மு.க.ஸ்டாலினுக்கு நடந்த கொடுமைகளை சொன்னேன். பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் நாடாளுமன்றத்தில் இருந்தார்கள். யாரும் பொய் என்று சொல்லவில்லை. அறையை விட்டு வெளியே வந்தேன், ஒரு கை என்னை தொட்டது. யார் தெரியுமா பிரியங்கா காந்தி. ராஜா சார் நீங்க சொன்னதெல்லாம் உண்மையா? என்று கேட்டார்.
அதெல்லாம் தாண்டிதான் இன்றைக்கு அரசியல் சட்டத்திற்காக மதச்சார்பின்மைக்காக உங்களோடு இருக்கிறோம் என்று சொன்னேன். அவையில் ராகுல் காந்தி இருக்கிறார், பிரியங்கா காந்தி இருக்கிறார், பிஜேபி தலைவர்கள் எல்லாம் உட்கார்ந்து இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் எமர்ஜென்சி தெரியாதா மிசா பற்றி தெரியாதா? இங்கிருக்கும் அமைச்சர் ஒருவர், இவர் அதற்காக போகவில்லை. இதற்காக போகவில்லை என்று பேசுகிறார். எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது, நீ யாருக்கு பிறந்த என்று?. இந்த தருதலை கூட்டத்துக்கு ஒரு தலைவன், ஒரு முதலமைச்சர்” என்று ஆவேசமாகப் பேசியிருந்தார்.
ஆ.ராசாவின் இந்த பேச்சு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து கண்டனங்களும் அதிகமாகி வருகிறது. அந்த வகையில் ஆ.ராசாவின் பேச்சு கண்டனம் தெரிவித்துள்ள எவிடன்ஸ் கதிர், வன்மம், ஆபாசம், திமிர் பேச்சு. அதுவும் தமிழச்சி தங்கப்பாண்டியன் என்கிற பெண் ஆளுமைகள் இருக்கும் மேடையில்.
இடைநிலை சாதி காரன் எவ்வளவு தந்திரமாக இருக்கிறான். எதற்கு இந்த ஆவேசம்? இப்படி கத்தினால் அந்த கட்சியில் உங்களை தலைவராக தேர்ந்தெடுக்கப் போகிறார்களா? மாமன்னன் படத்தில் ஒரு வசனம் வரும். கொஞ்சம் பணத்தை வீசி எறியுங்கள். அசிங்கமாக ஆடுவார்கள் என்று. அப்படித்தான் நடக்கிறது. என்று பதிவிட்டுள்ளார்.
