டெல்லி உயர்நீதி மன்றத்தில் சரிகம நிறுவனம் சார்பில் இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு அந்தந்த படங்களின் தயாரிப்பு நிறுவனத்திடம் தாங்கள் உரிமை பெற்றுள்ளோம், ஆனால் இளையராஜா அவருக்குத் தான் உரிமை இருப்பதாகக் கோருகிறார். அதற்குத் தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சரிகம நிறு​வனம் சார்​பில் வெளி​யிடப்​பட்ட பாடல்​களை ​இளைய​ராஜா பயன்​படுத்த இடைக்​கால தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்கக்கோரி இளையராஜா டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இடைக்​கால தடையை நீக்​க மறுத்​து​விட்​டது​.
இந்த நிலையில் இளையராஜா மீது சரிகம நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது. டெல்லி உயர்நீதி மன்றத்தில் தொடுத்துள்ள மனுவில், ‘நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறி, தங்களிடம் உரிமையுள்ள பாடல்களை இளையராஜா தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். மேலும் அப்பாடலுக்கு அவர் உரிமை கோரி வருகிறார். குறிப்பாக, ‘முரட்டுக்காளை’ படத்தில் இடம் பெற்ற ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாடல் தொடர்பாக இளையராஜா ‘பியாண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனத்திடன் உரிமை கேட்டு சட்ட நோட்டீஸ் அனுப்பினார். மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தார். அதில், டெல்லியில் நிலுவையில் உள்ள வழக்கு அல்லது அமலில் உள்ள நீதிமன்றத் தடை உத்தரவு குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
இந்த வழக்கில் பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகுதான் அந்தத் தடை உத்தரவு நீக்கப்பட்டது. இதனிடையே இளையராஜா, நீதிமன்றத் தடை உத்தரவை மீறி குறிப்பிட்ட சில பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி உரிமையும் கோரி வருகிறார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் வேண்டும்.
இந்த மீறலுக்காக இளையராஜாவை சிறையில் அடைக்கவும், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்று, அதன் மூலம் கிடைக்கும் தொகையை சரிகமா நிறுவனத்துக்கு ஒப்படைக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனுப் ஜெயராம் பம்பானி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள் மனு தொடர்பாக இளையராஜா பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
