பிறப்பால் தமிழராக இருந்தாலும், சார்மிளாவை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றது மலையாளத் திரையுலகம்தான். சிவாஜி கணேசன் நடித்த ‘நல்லதொரு குடும்பம்’ (1979) திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ‘ஒயிலாட்டம்’ (1991) என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து, தொடர்ந்து இயக்குநர் சிபி மலையாளி இயக்கிய ‘தனம்’ (1991) மற்றும் பத்ரன் இயக்கிய ‘அங்கிள் பன்’ (1991) ஆகிய இரண்டு திரைப்படங்களில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு சார்மிளாவுக்கு கிடைத்தது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
சொல்லப்போனால், இந்த இரண்டு படங்களும் சார்மிளாவை மலையாளத் திரைப்பட ரசிகர்களின் விருப்பமான நடிகையாக விரைவில் மாற்றின. அதே ஆண்டில், சினிமா ஜாம்பவான் பரதன் இயக்கிய ‘கேலி’ திரைப்படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இதன் மூலம் சிறந்த நடிப்புத் திறன் கொண்ட நடிகையாக தனது இடத்தை மேலும் வலுப்படுத்தினார். 1990-களின் முதல் பாதியில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் சார்மிளா பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். அவரது சொந்த வார்த்தைகளில் கூற வேண்டுமானால், காதல்தான் அவரது வாழ்க்கையை சீரழித்தது. ஆக்ஷன் ஹீரோ பாபு ஆண்டனியுடனான காதல் முறிவில் தொடங்கிய அவரது வாழ்க்கைச் சிக்கல்கள், பின்னர் இரண்டு தோல்வியடைந்த திருமணங்கள் வரை சென்றது.
‘அவர்தான் என் முதல் காதல்’: பாபு ஆண்டனியுடனான உறவு குறித்து சார்மிளா
மலையாள சினிமாவில் தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருந்தபோது, சார்மிளா ‘கடல்’ (1994) என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் பாபு ஆண்டனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போதுதான் இருவரும் முதன்முதலில் சந்தித்தனர். அதன்பின்னர் ‘ராஜதானி’, ‘கம்போளம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். அந்தக் காலகட்டத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. மொத்தம் 6 திரைப்படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றினர். நான்கு ஆண்டுகள் காதலித்து வந்த சார்மிளாவும் பாபு ஆண்டனியும் இறுதியில் பிரிந்தனர். ஒரு கட்டத்தில் தனது தந்தைக்கு பாபு ஆண்டனியை பிடிக்கவே இல்லை என்றும் சார்மிளா தெரிவித்திருந்தார்.
நாங்கள் நான்கு ஆண்டுகள் காதலித்தோம். கிட்டத்தட்ட திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் உறவிலும் இருந்தோம். ஆனால், என் தந்தைக்கு அவரைப் பிடிக்கவில்லை. அடிப்படையில், பாபுவை அவர் வெறுத்தார். முதலில், அவர் என்னைவிட வயதில் மிகவும் மூத்தவர். அதன்பிறகு, பாபுவைப் பற்றி சில மோசமான விஷயங்களை என் தந்தை கேள்விப்பட்டிருந்தார். ஆனால், அது என்ன என்பதை அவர் என்னிடம் சொல்லவில்லை” என்று கேரளி டிவியின் ஜே.பி. ஜங்ஷன் (‘JB Junction’) நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சார்மிளா கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “ஒருமுறை பாபு அமெரிக்காவுக்குச் சென்றார். அதன்பிறகு அவர் திரும்பி வரவே இல்லை. அதற்கு அவரது சகோதரர்தான் காரணம் என்று நினைக்கிறேன். இப்போதும் பாபு ஒரு மோசமான மனிதர் என்று நான் நினைக்கவில்லை. அவர்தான் என் முதல் காதல். அப்போது எனக்கு 19 வயது. ஆனால், அந்தக் காதல் நிறைவேறாததால், நான் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றேன். ஆனால், என் தாயார் என்னைக் காப்பாற்றினார்” என்றார்.
இருவரது உறவு குறித்து மேலும் பேசிய சார்மிளா, ஆன் மனோரமா (Onmanorama) ஊடகத்திடம் கூறுகையில், “அவர் என்னை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டார். குட்டிக்கானத்தில் நாங்கள் படப்பிடிப்பில் இருந்தபோது, என் அறையில் இருந்த கீசர் வேலை செய்யவில்லை. உடனே பாபு தனது அறையில் ஒரு வாளியில் சுடுநீரை நிரப்பி, அதை என் அறைக்குக் கொண்டு வந்தார். ஆனால், இதைப் பார்த்த என் தந்தை கடும் கோபமடைந்து அந்த வாளியைத் தட்டிவிட்டார்.
பின்னர் நாங்கள் ஒரு தொலைதூரப் பகுதியில் படப்பிடிப்பில் இருந்தோம். வானம் மேகமூட்டமாக இருந்தது. எனது கார் வர தாமதமானதைப் பார்த்த பாபு, தனது காரில் எங்களை அழைத்துச் செல்வதாகக் கூறினார். ஆனால், என் தந்தை என்னை அவருடன் ஒரே காரில் செல்ல அனுமதிக்கவில்லை. உடனே பாபு தனது காரிலிருந்து இறங்கி, நாங்கள் அந்தக் காரில் செல்லும்படி கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் அனைத்தும் என்னை பாபு ஆண்டனியிடம் மேலும் நெருக்கமாக்கின. எனக்காக அவர் இவ்வளவு சிரமங்களை அனுபவிப்பதைப் பார்த்து நான் மிகவும் நெகிழ்ந்தேன்” என்று சார்மிளா தெரிவித்தார்.
தனது தந்தையின் கண்டிப்பான அணுகுமுறையே தன்னை பாபுவிடம் மேலும் நெருக்கமாக்கியதாகவும் கூறியுள்ள சார்மிளா, “என் தந்தை அன்புடன் என்னிடம் விஷயங்களைப் புரியவைக்க முயன்றிருந்தால், நான் அந்த உறவில் சிக்கியிருக்க மாட்டேன். ஆனால், அவர் என்னைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடந்துகொண்டார். ஒரு மகளாக, நான் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டேன். என் தந்தை கொண்டு வந்த திருமணப் பேச்சுக்கு நான் ‘சரி’ என்று சம்மதித்திருந்தால், எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது” என்று அவர் கூறினார்.
பாபு ஆண்டனி காதல் உறவை மறுத்தபோது
எனினும், மற்றொரு ஜே.பி.ஜங்ஷன் (‘JB Junction’) நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, சக நடிகையுடன் தனக்கு காதல் உறவு இருந்ததாகக் கூறப்பட்டதை பாபு ஆண்டனி மறுத்தார். “நான் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால், ஒரு கல்லூரி மாணவியை காதலித்தேன். அவர் நடிகை அல்ல. பல பெண்கள் என்னைக் காதலிப்பதாகக் கூறியுள்ளனர். என்னுடன் காதல் உறவில் இருந்ததாக எந்த நடிகை கூறியிருந்தாலும், அதுகுறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை” என்று பாபு ஆண்டனி தெரிவித்தார்.
சார்மிளா மற்றும் பாபு ஆண்டனியின் காதல் உறவு குறித்து புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர் கலூர் டென்னிஸ், கிருஹலட்சுமி இதழில் எழுதிய ஒரு குறிப்பில், “கம்போளம் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் சார்மிளாவின் வாழ்க்கையில் காதல் முதன்முறையாக மலர்ந்தது. அதன் போக்கை நான் நன்றாகவே புரிந்துகொண்டேன். இந்தப் பாதை ஆபத்தானது என்று உணர்ந்தபோது, ஒரு சிறந்த ஆலோசகரைப் போல அவருக்கு அறிவுரை கூற முயன்றேன். ஆனால், காதல் சார்மிளாவை வலுவாக ஆட்கொண்டிருந்தது. இதனால், என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவர் என்னைத் தவிர்க்கத் தொடங்கினார். ஆண்டுகள் கடந்த நிலையில், சார்மிளாவின் காதல் தோல்வியடைந்தது. அதன்பிறகு அவர் மிகவும் மோசமான மனநிலைக்குத் தள்ளப்பட்டார்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
கிஷோர் சத்யாவுடன் ரகசிய திருமணம் மற்றும் சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு
சார்மிளாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் அத்துடன் முடிவடையவில்லை. பாபு ஆண்டனி உடனான காதல் முறிவுக்குப் பிறகு, அப்போது உதவி இயக்குநராக பணியாற்றி வந்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் கிஷோர் சத்யாவுடன் சார்மிளா நெருக்கமாகத் தொடங்கினார். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அந்தத் திருமணம் அவரது முந்தைய காதல் தோல்வியைவிட மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. இதன் பின்னர் அவரது திரையுலக வாழ்க்கையும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/09/03/actor-charmila-babu-antony-relationship-marriages-hema-committee-controversy-3-2026-09-03-12-26-09.webp)
நான் மன அழுத்தத்தில் இருந்த காலகட்டம் அது. கிஷோர் என்னிடம் அன்பாகப் பேசுவார். விரைவிலேயே நாங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமானோம். அப்போது எனக்கு திரைப்படங்களில் நிறைய நடிக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். ஆனால், திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நான் நிறுத்த வேண்டும் என்று கிஷோர் கூறினார்.
இதற்கிடையில் அவர் ஷார்ஜாவுக்குச் சென்றுவிட்டார். விக்ரமுக்கு ஜோடியாக ‘சேது’ (1999) திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், கிஷோருக்கு அது பிடிக்காது என்று நினைத்து அந்த வாய்ப்பை நான் நிராகரித்தேன். 4 ஆண்டுகள் அவர் அங்கேயும், நான் இங்கேயும் இருந்தோம். பின்னர் ஒரு நிகழ்ச்சிக்காக துபாய் சென்றபோது அவரைச் சந்தித்தேன். அப்போது, நமது உறவைத் தொடருவதில் தனக்கு விருப்பமில்லை என்று அவர் என்னிடம் கூறினார்” என்று சார்மிளா நினைவுகூர்ந்தார்.
எங்கள் திருமணத்தை ரகசியமாக வைத்திருக்கவே அவர் விரும்பினார். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்ட பதிவு திருமணமாக அது நடைபெற்றது. பின்னர், எனது பிரபலத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில்தான் கிஷோர் என்னைத் திருமணம் செய்துகொண்டார் என்பதையும், உண்மையில் என் மீது அவருக்கு ஆர்வம் இல்லை என்பதையும் புரிந்துகொண்டோம். அதன்பிறகு இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றோம்” என்று அவர் கூறினார்.
தோல்வியில் முடிந்த இரண்டாவது திருமணம்
எனினும், சார்மிளா மீண்டும் ஒருமுறை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். ராஜேஷ் ஒரு மென்பொருள் பொறியாளர். அவர் சார்மிளாவின் சகோதரியின் நண்பர்களில் ஒருவராக இருந்தார். மேலும், சார்மிளாவைவிட அவர் எட்டு வயது இளையவர். நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். எங்கள் மகனுக்காக நான் இந்து மதத்திற்கு மாற வேண்டும் என்று ராஜேஷ் விரும்பினார். ஆனால், பல பிரார்த்தனைகளுக்குப் பிறகுதான் என் மகன் பிறந்ததால், அவன் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நான் விரும்பினேன்.
சட்டரீதியாக தற்போது நாங்கள் விவாகரத்து பெற்றுவிட்டோம். இருந்தாலும், அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது, என் மகன் என்னுடன் இருக்க விரும்புவதாகக் கூறினான். ராஜேஷும் அடிக்கடி வந்து எங்கள் மகனைச் சந்தித்துச் செல்கிறார்” என்று சார்மிளா தெரிவித்தார். எனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு காதல் உறவுகள் இருந்தன. ஆனால், அந்த அனுபவங்களில் இருந்து நான் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளத் தவறிவிட்டேன்” என்று அவர் கூறினார்.
மலையாளத் திரையுலகில் மோசமான அனுபவம்
2024ஆம் ஆண்டு நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, தனது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மலையாளத் திரையுலகில் மிகவும் மோசமான நடத்தையை எதிர்கொண்டதாக சார்மிளா தெரிவித்திருந்தார். தன்னிடம் சுமார் 28 பேர் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக அவர் குற்றம்சாட்டினார். அர்ஜுனன் பிள்ளையும் அஞ்சு மக்களும்’ திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்களில் ஒருவரான எம்.பி. மோகனனைப் பற்றி குறிப்பிட்ட சார்மிளா, “ஒரு தயாரிப்பாளர் தனது நண்பர்களுடன் சேர்ந்து என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார்” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், இயக்குநர் ஹரிஹரன் தன்னிடம் ‘ஒத்துழைப்பீர்களா?’ என்று கேட்டதாகவும், இதுகுறித்து நடிகர் விஷ்ணுவிடமும் அவர் கேட்டதாகவும் சார்மிளா தெரிவித்தார். அதற்கு நான் தயாராக இல்லை என்று கூறிய பிறகு, விஷ்ணுவையும் என்னையும் அந்த திரைப்படத்திலிருந்து நீக்கிவிட்டனர்” என்று அவர் ஏசியநெட் நியூஸ் (Asianet News)-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். தற்போது திரைப்படங்களில் சார்மிளா அதிகளவில் நடிப்பதில்லை என்றாலும், அவ்வப்போது சில திரைப்படங்களில் தோன்றுகிறார். அதுமட்டுமின்றி, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
