ஹவுதி பயங்கரவாதிகள் தீவை கைப்பற்றியதால் சவுதி கச்சா எண்ணெய் வினியோக குழாய் மூடல்

கெய்ரோ: சவுதி அரேபியாவின் செங்கடல் வழியான கச்சா எண்ணெய் வினியோகிக்கும் குழாய்கள் மீது, ‘ட்ரோன்’ எனப்படும், ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாலும், எண்ணெய் குழாய் வழித்தடத்தில் உள்ள ஒரு தீவை ஈரான் ஆதரவு ஹவுதி பயங்கரவாதிகள் கைப்பற்றியதாலும், சவுதி எண்ணெய் வினியோகத்தை நிறுத்தியுள்ளது.

மேற்காசியாவில் உள்ள சவுதி, குவைத், ஈராக் உள்ளிட்ட கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகள், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே, கச்சா எண்ணெய்களை பிற நாடுகளுக்கு அனுப்புகின்றன. ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து ஆறு மாதங்களாக இடையூறை சந்தித்து வருகின்றன.

இதே போல், 1980ல் துவங்கி ஒன்பது ஆண்டுகளுக்கு ஈரான் – ஈராக் இடையே போர் நடந்தது. அப்போதும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. சவுதி அரேபியா தன் எண்ணெய் ஏற்றுமதிக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியை முழுமையாக தவிர்த்து, பாதுகாப்பான மாற்று வழியை உருவாக்க எண்ணெய் வினியோக குழாயை அமைத்தது. சவுதி கிழக்கு மாகாணத்தில் உள்ள எண்ணெய் வயல்களில் இருந்து, மேற்கில் உள்ள செங்கடல் வரை, 1,200 கி.மீ., நீளத்திற்கு இந்த குழாய் அமைக்கப்பட்டது.

‘ஈஸ்ட் – வெஸ்ட்’ எண்ணெய் குழாய் எனப்படும் இந்த வினியோக குழாய் மீது, சமீபத்தில், ட்ரோன்களில் வெடிகுண்டுகளை நிரப்பி மோதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்கள் ஈராக்கின் மெய்சான் மாகாணத்திலிருந்து ஏவப்பட்டன. சவுதி, ஈராக் இதை உறுதிப்படுத்தி உள்ளன. ஆனால் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

ரியாத் மற்றும் மதீனா பகுதிகளில் குழாய் மற்றும் பம்பிங் ஸ்டேஷன்கள் தாக்கப்பட்டன; சிலர் காயமடைந்தனர். சவுதி எண்ணெய் அமைச்சகம் தாக்குதலுக்கு பின் எண்ணெய் வினியோக குழாய் மூடப்பட்டதாக அறிவித்தது. அப்பகுதி ராணுவ நடவடிக்கைகளுக்கான தளபதி பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே, செங்கடல் கடற்கரை பகுதியில் ஹவுதி பயங்கரவாதிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. செங்கடலின் நுழைவாயிலான பாப் எல்-மண்டெப் ஜலசந்தியில் உள்ள மயூன் தீவை கைப்பற்றியுள்ளனர். இதனால்,எண்ணெய் ஏற்றுமதிக்கு சவுதி மாற்று வழிகளை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Source link