நாட்டில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களிலிருந்து முக்கிய நுகர்வு மையங்களுக்கு மொத்த சரக்குகளை விரைவாகக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டது. அந்த வகையில், மராட்டிய மாநிலத்தில் இருந்து ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ என்ற பிரத்தியேக இரயில் மூலமாக நாட்டின் பல்வேறு நகரங்களுக்குக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த இருப்பு வெங்காயம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சூழலில், கடந்த 10 நாட்களில் மட்டும் 17 நகரங்களில் 4,000 டன் இருப்பு வெங்காயத்தை மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் நிதி காரே நேற்று தெரிவித்துள்ளார். பருவமழை மற்றும் பண்டிகை காலத்தையொட்டி, வெங்காயத்தின் விலை சமீபத்தில் நாடு முழுவதும் மிக வேகமாக அதிகரித்தது. குறிப்பாக, டெல்லியில் கிலோ ரூ.58, மும்பையில் ரூ.53, சென்னையில் ரூ.63 என்ற அளவில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த விலையேற்றத்தைக் குறைக்க, தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் (என்சிசிஎப்) மற்றும் நபார்டு அமைப்புகள் மூலமாக வெங்காயத்தை மானிய விலையில் விற்க ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த மானிய விலை விற்பனை கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கப்பட்டது. என்சிசிஎப், நபார்டு அமைப்புகளில் இருப்பு வைக்கப்பட்ட வெங்காயம் கந்தா எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் நாட்டின் பல்வேறு நகரங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு கிலோ ரூ.35 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் மூலமாகச் சந்தையில் வெங்காயத்தின் விலையானது கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை குறைந்துள்ளது. அக்டோபர் மாத நடுப்பகுதியில் புதிய காரீப் வெங்காய வரத்துத் தொடங்கும் போது இந்த விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
