“ஓட்டு போடாத மக்களை இப்படியா பேசுவது?, இது தான் திமுக”

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 3ஆம் தேதி முதல்வர் விஜய் தாக்கல் செய்த காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு இன்று (07-09-26) முதல்வர் விஜய் பதிலளித்தார்.

அப்போது அவர், “கருத்துரிமை, பேச்சுரிமை இதெல்லாம் எந்த அளவுக்கு எல்லாரும் சரியாக பயன்படுத்துகிறார்கள் என்பதை நாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும். அரசியல் ரீதியாக ஒருத்தருக்கு ஒருத்தர் என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்துகொள்ளலாம். அது கடுமையான விமர்சனங்களாக கூட இருக்கலாம். ஆனால் அதே அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் மக்களையோ பெண்களையோ அல்லது வேறு யாராவதையோ தாழ்த்தி தரம் தாழ்ந்து பேசுவது எல்லாம் வேண்டாம் என்பது தான் ஒரு வேண்டுகோள். இது எல்லோருக்கும் பொதுவான வேண்டுகோள். ஏனென்றால் சமீப காலமாக நம் தமிழ்நாட்டில் ஆபாச நதியாக ஓடிக் கொண்டிருக்கிறது, வன்ம நதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். பெண்களை அவதூறாக அசிங்கமாக டபுள் மீனிங்கிள் பேசுவதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் வீட்டில் தாயாக, ஒரு அக்காவாக இருப்பதும் அதே பெண்கள் தான். அதனால் அதை மனதில் வைத்து பேசினால் நன்றாக இருக்கும்.

இதற்கு முன்னாடி மக்கள் எனக்கு கொடுத்த இடமாக இருக்கட்டும், இப்போது எனக்கு மக்கள் கொடுத்திருக்கிற இடமாக இருக்கட்டும், அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் ரொம்ப ரொம்ப முக்கிய காரணம் இதெல்லாம் சாத்தியமானதற்கு நம் வீட்டு பெண்கள் தான். அதனால் பெண்களை பற்றி யாராவது அவதூறாக அசிங்கமாக இந்த மாதிரி எல்லாம் ஏதாவது பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும். அரசியல் காரணம், அரசியல் காழ்புணர்ச்சிக்காக நான் பேசுகிறேன் என்று யாராவது நினைத்தால் அதற்கு நாம் பொறுப்பாக முடியாது. ஏனென்றால் அந்த எண்ணத்தில் நாம் அரசியலுக்கு வரவில்லை, நமக்கு அவசியமும் இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக எவ்வளவு அவமானங்களை சந்தித்தார் என்பதை நாம் கேள்விப்படுகிறோம். இதே சட்டசபையில் இந்த எதிர்க்கட்சியினால் எவ்வளவு அவமானங்களை சந்தித்தார். அதனால், இனி வரும் காலத்தில் எந்த பெண்களுக்கு நடக்கக் கூடாது. டெக்னாலஜி வளர்ந்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது, நாகரீகம் வளர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. அதனால் அரசியல் ரீதியாக என்ன வேண்டுமானலும் விமர்சனம் வைக்கலாம். கொஞ்சம் நாளைக்கு முன்னாடி ஒரு உறுப்பினர் எலும்பு டாக்டர் மாதிரி சட்டசபைக்குள்ளேயே எலும்பை உடைப்பேன் என்கிறார். இந்த மாதிரி பேச்செல்லாம் எதற்கு? இதுதான் அரசியலா? இப்படி பேசி பேசி தான் மக்கள் உங்களை அந்த பக்கம் உட்கார வைத்திருக்கிறார்கள்” என்று கூறியதும் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “நான் அவர்களுக்கு அட்வைஸ் செய்ய வரவில்லை, இது தான் உண்மை. இன்னொரு திமுக மூத்த உறுப்பினர், மக்கள் அவரது கட்சிக்கு ஓட்டு போடாததால் மக்களுக்கு நல்ல சாவே வராது என்கிறார். இத்தனை வருடமாக இதே மக்கள் தான் ஓட்டு போட்டு இருந்தாங்க. அந்த மக்களை பார்த்து எப்படி அந்த வார்த்தை வருகிறது. மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத அந்த மனசு எப்போது இல்லையோ இவர்களெல்லாம் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? என்ற கேள்வி தான் வரும். மக்கள் தீர்ப்பை கொஞ்சமாவது மதிக்க வேண்டும். அரசியலில் இருக்கிற பெரியவர்கள் இந்த ஆபாச நதி, வன்ம நதி பேச்சுக்களை இதில் தவறு இருக்கிறது, நாங்கள் அந்த காலத்தில் பேசாத பேச்சா என்கிறார்கள். அந்த பேச்சு தவறு என்பதே தெரியவில்லை, அதை அவர்கள் நியாயப்படுத்திக்கிறார்கள். ஐயா பெரியவர்களே அந்த காலத்தில் அரசியலில் இருக்கிற நல்லது மட்டுமே எடுத்துப்போம்.  அவதூறாக அசிங்கமாக பேசுகிற அரசியல், துருபிடிச்சு போன தேஞ்சு போன அரசியல் நமக்கு எதற்கு? எது பேசினாலும் நாங்கள் மிசாவை பார்த்தவர்கள் என்கிறார்கள். ஐயா பெரியவர்களே எல்லோருக்கும் அந்த மிசாவை பற்றி வரலாறு தெரியும். நடந்தது, நடக்கிரது, நடக்க போவது எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கவிஞர் கண்ணதாசன் திமுகவை பற்றி பேசி பழகிய பொய், வாங்கி பழகிய கை, போட்டு பழகிய பை என்று சொன்னார், இது தான் திமுக.. நம்முடைய அரசு யாருக்கும் தனிப்பட்ட அடையாளமாக எப்போதுமே இருக்காது. நம்முடைய அரசுடைய அடையாளம் தமிழ், தமிழர், தமிழ்நாடு அவ்வளவு தான்… நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தமிழ்நாடுதான் என் வீடு, எட்டு கோடி பேர் மக்கள்தான் என் சொந்தங்கள். அந்த 8கோடி பேருக்கும் சொந்தமான அந்த எட்டு கோடி பேருக்கும் அடையாளமாதான் நம் அரசு எப்போதுமே இருக்கும். மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வார், தம் மக்கள் நலம் ஒன்றேதான் கருத்தில் கொள்வார் என்று  எம்ஜிஆர் ஒரு பாட்டு பாடியிருக்கிறார். அப்போது அவர் யாருக்காக பாடினார் என்றெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால் இப்போது அதை மாற்றி சொல்கிறேன். மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவோம், தமிழக மக்கள் நலம் ஒன்றே தான் கருத்தில் கொள்வோம். அதனால் தான் மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொட மாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம் என்று சொன்னோம்” என்று ஆவேசமாகப் பேசினார். 

Source link