30 ஆண்டுகள் காவல்துறைக்கு தண்ணி காட்டிய பலமுகக் கில்லாடி: கேரளாவில் சிக்கியது எப்படி? யார் இந்த சாம் ஆண்டனி?

எழுதியவர்: கிரண் பராஷர்

சாம் பீட்டர், ராகுல் பீட்டர், டேனி தரக்கன், ராஜேஷ் ராபின்சன், ஆண்டனி பிரான்சிஸ் எனப் பல பெயர்களில் வலம் வந்த இவரைப் பற்றி, “எங்களுக்குத் தெரிந்தவரை இவர் பயன்படுத்திய 5 பெயர்கள் இவை; இன்னும் எத்தனை பெயர்களில் உலா வந்தாரோ?” என்று காவல்துறை அதிர்ச்சி தெரிவிக்கிறது.

ஆங்கிலத்தில் படிக்க:

இவர் இடங்களை மாற்றுவதோடு மட்டுமல்லாமல், தான் எந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரி என்பதையும் மாற்றிக்கொண்டே இருப்பார். சில நேரங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரி என்றும், சில நேரங்களில் ‘ரா’ (RAW) உளவுத்துறை அதிகாரி என்றும் கூறிக்கொள்வார். போலியான பாஸ்போர்ட், ஆதார்கார்டு மற்றும் பான் கார்டுகளைப் பயன்படுத்தி தனது அடையாளத்தை உண்மை என நம்ப வைப்பார். பிரபல பாலிவுட் திரைப்படமான ‘ஸ்பெஷல் 26’ படத்தில் வருவதைப் போல, சி.பி.ஐ அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு பணக்காரர்களை ஏமாற்றும் பாணியிலேயே இவரது குற்றங்களும் அமைந்திருந்தன.

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, கர்நாடக மாநில மங்களூரு நகரக் காவல்துறையினர் 64 வயதான சாம் ஆண்டனியை கேரள மாநிலம் கண்ணூரில் வைத்து கைது செய்தனர். இந்தச் சோதனை 2019-ல் பதிவான ஒரு வழக்கு தொடர்பாக நடத்தப்பட்டது.

ஆள் மாறாட்ட வித்தகர்

இவரிடம் விசாரணை நடத்திய மங்களூரு கிழக்கு காவல் ஆய்வாளர் அனந்த பத்மநாபா கூறுகையில், “இவர் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடியவர்; சட்ட திட்டங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர். இவரைப் பற்றி தெரியாத ஒருவர் 10 நிமிடங்கள் பேசினால் கூட, இவர் ஏதோ மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரி அல்லது பெரும் தொழிலதிபர் என்று நம்பிவிடுவார்கள்” என்றார்.

கட்டுமஸ்தான உடல் அமைப்பு, இன் செய்து அணியப்பட்ட சட்டை, பளபளக்கும் ஷூக்கள் என ஒரு அரசு அதிகாரியின் கம்பீரமான தோற்றத்துடனேயே இவர் வலம் வந்துள்ளார். முன் தலைமுடி சிறிது குறைந்திருந்தாலும் அடர்ந்த கருப்பு முடியுடன், 5 அடி 8 அங்குல உயரமும், அதிகாரத் தோரணையும் கொண்டவராக இருந்துள்ளார்.

சிக்கலில் உள்ளவர்களைக் குறிவைக்கும் பாணி

மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணை, வங்கி மோசடி மற்றும் வரிப் பிரச்சினைகளில் சிக்கியுள்ள பணக்காரத் தொழிலதிபர்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு ‘தீர்வு’ காண்பதாகக் கூறி லஞ்சம் பெறுவதே இவரின் முதன்மை பாணியாகும்.

பெரும்பாலும் ‘தேசிய குற்ற புலனாய்வு பணியகம்’ (என்.சி.ஐ.பி) என்ற அமைப்பின் மூத்த அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். (என்.சி.ஐ.பி என்பது குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு தனியார் தொண்டு நிறுவனம். ஆனால், சாம் ஆண்டனி அதை நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பு போல சித்தரித்து ஏமாற்றியுள்ளார்).

2018-ல் தொழிலதிபர் அப்துல் ஷெரீஃப் என்பவரது சகோதரர் சுங்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது, வழக்கை முடித்துத் தருவதாகக் கூறி 10 மாதங்களில் ரூ.1.13 கோடி வரை பறித்துள்ளார். இந்த மோசடி தாமதமாகத் தெரியவரவே, 2019 ஆகஸ்டில் கர்நாடகாவின் கோனாஜே காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதேபோல் 2019-ல் பெங்களூரு எலங்காவில் என்.சி.ஐ.பி அதிகாரி எனக் கூறி ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து, 7 மாதங்கள் நடத்திவிட்டு வாடகை கொடுக்காமல் தப்பியோடியுள்ளார்.

30 ஆண்டுகால குற்றப் பின்னணி

இவரது குற்றப் பின்னணி 1997-ல் சத்தீஸ்கரின் கைராகர் காவல் நிலையத்தில் பதிவான ஏமாற்று வழக்கில் தொடங்குகிறது. 1998-ல் கர்நாடகாவில் முதல் வழக்கு பதிவானது.

2019 ஆகஸ்ட் 16-ல் மங்களூருவில் உள்ள லாட்ஜ் ஒன்றில் சாம் ஆண்டனி தனது கூட்டாளிகள் 7 பேருடன் தங்கியிருந்தபோது, துப்பாக்கிகள், போலி அடையாள அட்டைகளுடன் காவல்துறையினரிடம் பிடிபட்டார். அப்போதுதான் இவர் மீது 2007-ல் ‘இன்டர்போல்’ (Interpol) ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது காவல்துறைக்கு தெரியவந்தது.

சத்தீஸ்கர், கர்நாடகா, பீகார், சென்னை, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் எனப் பல மாநிலங்களில் குற்றங்களைச் செய்துவிட்டு தலைமறைவாவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வடகிழக்கு மாநிலங்களில் இவருக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்ததால், அங்குச் சென்று தலைமறைவாகியுள்ளார். தன் பெயரில் சிம் கார்டோ அல்லது வங்கி பரிவர்த்தனைகளோ செய்யாமல், லக்னோவில் உள்ள தனது காதலி மூலமாகப் பணப் பரிவர்த்தனைகளைச் செய்து காவல் துறைக்கு டிஜிட்டல் தடயம் எதுவும் கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்.

சிக்கியது எப்படி?

2023-ல் பிணையில் வெளிவந்த சாம் ஆண்டனி, உடனடியாகத் தலைமறைவானார். இவரைப் பிடிக்க மங்களூரு குற்றப்பிரிவு (சி.சி.பி) சார்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

விசாரணையில், இவர் கேரளா அரசியல்வாதி ஒருவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, ஓய்வுபெற்ற என்.சி.ஐ.பி அதிகாரி ‘டேனியல் தரக்கன்’ என்ற பெயரில் ஒரு ஊடக விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற புகைப்படங்கள் காவல் துறைக்குக் கிடைத்தன. அதை வைத்துத் தீவிரமாகத் தேடி, கண்ணூரில் வைத்து அவரைப் பொறிவைத்துப்பிடித்தனர்.

தற்போது இவர் மீது நாடு முழுவதும் உள்ள 17 பழைய வழக்குகளைத் தோண்டி எடுத்து மங்களூரு நகரக் காவல் ஆணையர் சுதீர் குமார் ரெட்டி விசாரணை நடத்தி வருகிறார். இவர் கைது செய்யப்பட்ட பிறகும் கூட, “அவர் மிகவும் நேர்மையான அதிகாரி, அவரை ஏன் கைது செய்தீர்கள்?” என்று கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் பிரமுகர்களும் கர்நாடகக் காவல் துறைக்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசி வருவது அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Source link