ஐ.ஆர்.சி.டி.சி.,யின் 'சர்வர்' முடக்கம் தீபாவளி முன்பதிவு பயணியர் ஏமாற்றம்

சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல இருப்போர், ஒரே நேரத்தில் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்ய முயன்றதால், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் முடங்கியது. இதனால், பயணியர் ‘டிக்கெட்’ கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத்தில், பொதுமக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

அறைகள் முன்பதிவு தற்போதுள்ள நிலவரப்படி, 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். பஸ் டிக்கெட், உணவு ஆர்டர் செய்வது, அறைகள் முன் பதிவு உட்பட, பல்வேறு கூடுதல் வசதியுடன், இந்த இணையதளம் செயல்படுகிறது .

ஆனாலும், இந்த இணையதளத்தில், அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட இணையதளம், சமீபத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக ரயில்வே அறிவித்தது. எனினும், பயணியர் அவதிப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, நவம்பர், 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

தற்போது, 60 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. நவ., 5ம் தேதி பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் முடிந்தது. நவ., 6ம் தேதி பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று நடந்தது.

முன்பதிவு தொடங்கிய ஐந்து நிமிடங்களில், தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில், முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

அதேசமயம், லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் முன் பதிவு செய்ய முயன்றதால், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் முடங்கியது.

இதனால், டிக்கெட் கிடைக்காமல், பயணியர் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மேம்படுத்தப்பட்டிருப்பதாக அறிவித்தது. ஆனால், இன்னும், ‘சர்வர்’ பிரச்னை தீரவில்லை.

கோளாறு முன்பதிவு தொடங்கிய சில நிமிடத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது.

பின்னர், அடுத்த இரண்டு நிமிடங்களில், டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டதாக தெரிவிக்கிறது. ஏதாவது முறைகேடு நடக்கிறதோ என்ற சந்கேத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த பிரச்னைக்கு நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Source link