கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 45 வயதுடைய பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த சுமார் 8 கிலோ எடையுள்ள கருப்பை முட்டைப்பை கட்டி பல்துறை மருத்துவக் குழுவினரால் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த அந்தப் பெண் வயிற்றுப் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வந்த வீக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கருப்பை முட்டைப்பை புற்றுநோய் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு பல்வேறு மருத்துவ மற்றும் கதிரியக்கப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சுமார் 8 கிலோ எடையுள்ள பெரிய கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அறுவைசிகிச்சை புற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜெயக்குமார் தலைமையில், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்துறை பேராசிரியரும் துறைத் தலைவருமான டாக்டர் மிருணாளினி வழிகாட்டுதலுடன் மருத்துவர்கள் நீரஜா, சுகன்யா, சாய் மிருணாளினி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். மயக்கவியல் சிகிச்சையை மருத்துவர் சந்தோஷ் மாதவன் வழங்கினார்.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளி நலமுடன் குணமடைந்து செப்டம்பர் 4-ஆம் தேதி வீடு திரும்பினார். மருத்துவக் கல்லூரி முதல்வர் பாஸ்கர், மருத்துவக் குழுவினரின் ஒருங்கிணைந்த பணியைப் பாராட்டினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேம்பட்ட பல்துறை புற்றுநோய் சிகிச்சை வசதிகள் வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பொதுவான புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான MTM OPD சேவைகள் மருத்துவமனையில் வழங்கப்படுகின்றன.
தினசரி இலவசமாக வாய்வழி, மார்பக மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகளுடன் VIA, Pap smear, Colposcopy மற்றும் தேவையானபோது Biopsy உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
சந்தேகத்திற்கிடமான மற்றும் புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு Surgical Oncology, Radiation Oncology, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் உள்ளிட்ட பல்துறை நிபுணர்கள் மூலம் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், LINAC அடிப்படையிலான கதிர்வீச்சு சிகிச்சை வசதியை ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
