முஸ்லிம்களுக்குத் தடை; ஆதங்கத்தில் பொதுமக்கள்

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 10 நாள் ’நவராத்திரி’ பண்டிகையின் போது நடைபெறும் ’கர்பா’ மற்றும் ’தாண்டியா’ நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் பங்கேற்க விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) தடை விதித்துள்ளது.   

நவராத்திரி என்பது வெறும் பாடலும் நடனமும் மட்டுமல்ல, அது ஒரு வழிபாட்டு வடிவம் என்று வி.எச்.பி செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராஜ் நாயர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “முஸ்லிம்களுக்கு இந்த விழாவில் கலந்துகொள்ள அனுமதி இல்லை. சிலை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த மத விழாவில் பங்கேற்கக் கூடாது. இந்த விழாவில் கலந்துகொள்வார்களின் மதத்தை உறுதி செய்ய அவர்களது அடையாள அட்டை சரிபார்க்கப்படும். விழாவில் கலந்துகொள்பவர்கள் நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு தான் வரவேண்டும். மதமாற்றம் மற்றும் பசு வதைக்கு எதிரான கொள்கைகளில் வி.எச்.பி ஒரு போதும் சமரசம் செய்துகொள்ளாது” என்று தெரிவித்தார்.   

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முஸ்லிம்களை வெறுப்பவர்கள் உண்மையான இந்துவாக இருக்க முடியாது. மத பேதமற்ற முறையில் மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இந்நிலையில், வலதுசாரி அமைப்பினை சேர்ந்தவர்கள், இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபடுவது பெரும் வருத்தமளிப்பதாகப் பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில், வலதுசாரி அமைப்புகளின் இது போன்ற செயல்பாடுகள், சமூகத்தைப் பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்ததுள்ளனர். மேலும், இதுபோன்ற செயல்கள் மக்களிடையே பிரிவினையையும், வன்முறையையும் தூண்ட ஏதுவாக அமையும் எனப் பலர் கண்டனங்களையும், வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர். 

Source link