பிரதமர் மோடி வரும் 12ம் தேதி புதுச்சேரி வருகை

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வரும் 12ம் தேதி வருகை தரும் பிரதமர் மோடி, பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதனையொட்டி, கூட்டம் நடத்துவதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில், பா.ஜ.,வினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. வரும் தேர்தலிலும் புதுச்சேரியில் என்.ஆர்.காங்., – பா.ஜ.,-அ.தி.மு.க., உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தொடருகிறது. என்.ஆர்.காங்., 17 இடங்களில் போட்டியிட காய் நகர்த்துகின்றது. இதற்கிடையில் வரும் 11ம் தேதி அல்லது 12ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி, பா.ஜ., சார்பில் லாஸ்பேட்டையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

பிரதமர் வருகையையொட்டி, அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடத்தை தேர்வு செய்வதற்காக பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், தீப்பாய்ந்தான் ஆகியோர் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானம் மற்றும் தாகூர் கல்லுாரி மைதானத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, பிரதமரை மேடைக்கு அழைத்து செல்லும் வழி, கூட்டணி கட்சி முக்கிய தலைவர்கள் செல்லும் வழி ஆகியவற்றை பார்வையிட்டனர். பொதுக்கூட்டம் நடைபெறும்போது முன்னணி நிர்வாகிகளை எங்கெங்கு அமர வைப்பது என்பது பற்றியும் விவாதித்தனர். பொது மக்கள் அமரும் இடம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகள் தொடர்பாகவும் பா.ஜ., தலைவர்கள் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.

இருப்பினும் பொதுக்கூட்டம் நடக்கும் மைதானம் இறுதி செய்யப்படவில்லை.பொதுக்கூட்டம் நடக்கும் இடம் இறுதியானதும் டி.ஜி.பி., ஷாலினிங் சிங் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். அடுத்ததாக பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி இடத்தினை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.

Source link