வாஷிங்டன்: இந்தியாவிற்கான வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான எல்லாப் பெருமையும் அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியை சேரும் என்று அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்து உள்ளார்.
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்கியதால், 25 சதவீத அபராத வரி உட்பட 50 சதவீத அமெரிக்க வரிகளை இந்தியா எதிர்கொண்டது. தற்போது பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
அதிபர் டிரம்ப் நிர்வாகம் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த காரணத்தால் இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்துள்ளதாக அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உறுதிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி: அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் வலுவான உறவுக்கு நன்றி. இந்திய பொருடகள் மீதான இறக்குமதி வரிகளை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்து, அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்தன. எல்லாப்புகழும் அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடிக்கே சேரும்.
இருநாட்டு தலைவர்களும் ஒரு சிறந்த தனிப்பட்ட உறவை கொண்டுள்ளனர். இது ஒப்பந்தத்தை உறுதி செய்ய வழி வகுத்தது. இது ஒரு புதிய சகாப்தம். உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி நிலைமையை அமைதிப்படுத்த வேண்டும் என்பதே ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
அதிபர் டிரம்பைப் போலவே பிரதமர் மோடியும் அமைதியைக் கொண்டுவருவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர் என்பதை நான் அறிவேன். இவ்வாறு அவர் கூறினார்.
