பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டம் ரகோபூர் பகுதியில் உள்ள சங்கர்பூர் கிராமத்தில் நூற்றாண்டு கால பழமை வாய்ந்த துர்க்கையம்மன் கோயில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து நாத்நகர், ரகோபூர் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் கங்கை ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், இந்த தொடர் மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கும், கரையோரத்தில் மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சங்கர்பூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் அரிப்பு காரணமாக, ஆற்றின் கரையோரத்தில் இருந்த சைதி துர்கை அம்மன் கோயில், ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.
கிட்டதட்ட 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில், வெள்ள அரிப்பின் காரணமாக சில நொடிகளில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (செப்டம்பர் 1) ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கில் கரையோரத்தில் இருந்த ஏராளமான வீடுகளும் அடித்து செல்லப்பட்டன.
ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்ததன் காரண்மாக கரையோரங்களில் உள்ள நிலப்பரப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக துணை முதல்வர் விஜய் குமார் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பாதிகப்பட்ட மக்களுக்கு நாத்நகர் மற்றும் சங்கர்பூர் பகுதிகளில் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
