துல்கர் சல்மான் புதிதாக தயாரித்து நடித்துள்ள படம் ‘ஐ எம் கேம்’. இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர் திரைப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், நடிகரும் இயக்குநருமான மிஷ்கின், காயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர். இப்படம், துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் ஆகும். செப்டம்பர் 3ஆம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் இப்படம் வெளியாகிறது.
இப்படத்தின் தமிழ் பதிப்பினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் முன் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் துல்கர் சல்மான் பேசுகையில், “நான் எந்தப் படத்தின் விளம்பரத்திற்காக சென்னைக்கு வந்தாலும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரடியாகச் சந்தித்து படத்தின் காட்சிகளையும் முக்கிய அம்சங்களையும் பகிர்ந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். படம் உங்களுக்குப் பிடித்திருந்தால், நீங்கள் நிச்சயம் அதற்கு ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.
அயம் கேம் படத்தைப் பார்க்கும்போது, அது கிட்டத்தட்ட ஒரு தமிழ் படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். இதில் ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் இதுவரை உருவான மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு இதுதான். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் எப்படி ஒரு சர்பிரைஸ் இருந்ததோ அது இந்த படத்திலும் இருக்கும். உடல் நீதியாகவும் மன ரீதியாகவும் எனக்கு ஒரு சவாலான படம். தொடர்ந்து சவால் தரும் கதாபாத்திரங்களிலேயே நடிக்கவுள்ளேன்.
இப்படத்தில் நடித்துள்ள கதிரின் நடிப்பு மிகவும் இயல்பாகவும் தீவிரமாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக, படத்தில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் நம்பகத்தன்மையுடன் நடித்துள்ளார். மிஷ்கின் இந்தப் படத்தின் முக்கியமான அங்கம். அவரது அளவுக்கான உற்சாகமும் எனர்ஜியும் இன்றைய இளம் தலைமுறையினரிடமே அரிதாகத்தான் பார்க்க முடியும். சம்யுக்தா விஸ்வநாதனுக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும். ஆண்டனி வர்கீஸ் பெப்பே, இந்தப் படத்தின் முக்கியமான பலம். மலையாளத்தில் பெரிய படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அவர், இந்தப் படத்திலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் வகையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரை தமிழ் ரசிகர்களும் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ஜேக்ஸ் பிஜாயின் இசையில் இந்தப் படம் ஒரு அசத்தலான ஹிட் ஆல்பமாக அமையும். ஏற்கனவே வெளியான பாடல்களைத் தாண்டி, படத்தில் ரசிகர்களை கவரும் மேலும் பல பாடல்கள் உள்ளன. இப்படம் முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இதில் காமெடி, ரொமான்ஸ், மர்மம், சஸ்பென்ஸ், ஆக்ஷன், த்ரில்லிங் மற்றும் கேமிங் என ரசிகர்களை கவரும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.
