புதுடில்லி: ”கடந்த காலாண்டில், இந்தியா 7.8% வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. இன்று, இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் உலகிற்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு களமாகத் திகழ்கிறது ” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
அரசு முறை பயணமாக டில்லி வந்துள்ள பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார். பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவும், பெல்ஜியமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உறவை மேலும் வலுப்படுத்தி வருகின்றன. இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது ஒரு முக்கிய மைல்கல். செமிகண்டக்டர் துறையில் பெல்ஜியமும், இந்தியாவும் இணைந்து செயல்படுகின்றன.
உக்ரைன் போராக இருந்தாலும் சரி, மேற்கு ஆசியா மோதலாக இருந்தாலும் சரி, விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம்; கடந்த காலாண்டில், இந்தியா 7.8% வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. இன்று, இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் உலகிற்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு களமாகத் திகழ்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் கூறியதாவது: பெல்ஜியம் மற்றும் இந்தியா இடையிலான உறவை பொருளாதாரம், அரசியல் உள்ளிட்டவற்றில் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல நாங்கள் விரும்புகிறோம். நிச்சயமற்ற ஒரு உலகில் வாழ்கிறோம்; இது குறித்து நாம் விரிவாகப் பேசினோம்.
நமது உறவு ஏற்கனவே வலிமையாக உள்ளன. இந்தியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையிலான வர்த்தக உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது. ஆனால் மிக முக்கியமாக, நமது தொடர்பு வர்த்தகத்தையும் தாண்டி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வரலாறு ஒன்றும் உள்ளது; அந்த வரலாற்றை நான் இன்று போற்ற விரும்புகிறேன். இவ்வாறு பார்ட் டி வெவர் கூறினார்.
