தனியார் பொறியியல் கல்லூரியில் அடுத்தடுத்து நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஷெரின் (வயது 19) என்ற மாணவி நேற்று (02.09.2026) கல்லூரியின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன்பே, அதே கல்லூரியைச் சேர்ந்த மற்றொரு மாணவர் இன்று (03.09.2026) திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் படுகாயமடைந்த அம்மாணவரை மீட்ட கல்லூரி நிர்வாகம், உடனடியாக அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

நேற்று மாணவி ஒருவர்  கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், மற்றொரு மாணவர் இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட  சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அடுத்தடுத்த அதிர்ச்சிச் சம்பவங்களால் கல்லூரி வளாகத்தில் பெரும் பதற்றமும் மாணவர்களிடையே கொந்தளிப்பும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி கல்லூரிக்குக் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்படுவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடந்த இக்கோரச் சம்பவங்களுக்கான உண்மைப் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Source link