சென்னை: சென்னை அருகே காட்டாங்கொளத்துார் ஜி.எஸ்.டி., சாலையில், த.வெ.க., அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதியதில், இறையன்பு, 27, என்ற வாலிபர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஜெகதீஸ்வரி, 40; சமூக நலத்துறை அமைச்சராக உள்ளார். சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக காரில் சென்னை வந்தார்.
அரசு வாகனத்தில் அவர் வந்த நிலையில், ஜெகதீஸ்வரியின் குடும்பத்தினர், அமைச்சருக்கு சொந்தமான, ‘மாருதி சுசூகி எர்டிகா’ என்ற காரில் வந்தனர். மதுரை கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த சின்ன அக்னி, 28, என்பவர் அந்தக் காரை ஓட்டி வந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஜி.எஸ்.டி., சாலையில் நேற்று அதிகாலை கார் வந்த போது, சாலையை கடக்க முயன்ற, ‘ஹோண்டா டியோ’ ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், காட்டாங்கொளத்துார் செல்லியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த இறையன்பு என்ற வாலிபர் படுகாயமடைந்தார் .
அங்கிருந்தோர் அவரை மீட்டு, ‘108 ஆம்புலன்ஸ்’ வாயிலாக, சிங்க பெருமாள் கோவிலில் உள்ள அவசர சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்து குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவர் சின்ன அக்னியை கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், கூலி தொழிலாளியான இறையன்பு, ஜி.எஸ்.டி., சாலை எதிரே உள்ள துலுக்காணத்தம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, விபத்தில் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
ஓட்டுநராக மாறிய
பாதுகாப்பு காவலர்
சென்னை போலீசின் ஆயுதப்படை காவலரான சின்ன அக்னி, அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பாதுகாவலராக பணியமர்த்தப்பட்டு உள்ளார். இவரை, அமைச்சர் தவறாக கார் ஓட்டுநராக பயன் படுத்தியது தெரிய வந்துள்ளது.
